அறிமுக இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள போர் தொழில் திரைப்படத்தில் சரத்குமார் அசோக்செல்வன், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சைக்கோ த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் போர் தொழில் ஜூன் மாதம் 9ம் தேதி வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்து இரண்டு பெண்கள் கொலை செய்யப்படுவதைk கொண்டு தொடங்கும் கதைக்களம், விறுவிறுப்பாக நகர்ந்து பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 


மிகப்பெரிய பொருட்செலவில் ஆக்‌ஷன் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட போர் தொழில் ரூ.50 கோடி வரை வசூல் செய்தது. போர் தொழில் படம் திரையில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஓடிடியில் வெளியாக உள்ளது.


கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு ஓடிடியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் போர் தொழில் படமும் ஓடிடியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வரும் 28ம் தேதி ஓடிடி தளமான சோனி லைவ்வில் போர் தொழில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதம் 9ம் தேதியே போர் தொழில் ஓடிடியில் ரிலீசாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றதால் ஓடிடியில் வெளியாகும் தேதி தள்ளிப்போனது.


ஆறு கோடி ரூபாய் செலவில் விளம்பரங்கள், ப்ரொமோஷன்கள் இன்றி வெளியான போர் தொழில் திரைப்படம் வெளியானது முதல் நாளில் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தது. ஆரம்பத்தில் குறைவான அரங்குகளே போர் தொழில் படத்துக்கு கிடைத்த நிலையில், நாள் ஆக ஆக படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து காட்சிகள் அதிகரிக்கப்பட்டன.


குறிப்பாக சென்னையில் இப்படத்துக்கு பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டதுடன், நள்ளிரவு காட்சிகளும் அறிவிக்கப்பட்டு, பெரும்பாலான இடங்களில் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது.


சைக்கோ கில்லர் கதையான ராட்சசன் படத்திற்கு பிறகு அதிகமாக ரசிகர்களைக் கவர்ந்த படமாக போர் தொழில் பார்க்கப்படுகிறது. தடயம் இல்லாமல் பெண்களை மட்டும் குறி வைத்து தொடர்ந்து நடக்கும் கொலைகளை செய்யும் குற்றவாளியையும், அதன் பின்னணியையும், சீனியர் போலீஸ் அதிகாரியாக வரும் சரத்குமாரும், அனுபவம் இல்லாத ஜூனியர் போலீஸாக இருக்கும் அசோக் செல்வனும் இணைந்து கண்டுபிடிக்கும் கதை படத்துக்கு பலமாக உள்ளது.


படத்தின் கிளைமாக்சில், அடுத்த வழக்கை நோக்கி சரத்குமார் செல்வது இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.