தமிழ் சினிமா உலகத்துக்கு 80கள் என்பது பொற்காலம். நிறைய புதுமுக நடிகர்கள் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்கள் அதோடு அதற்கேற்ப இளையராஜாவின் பாடல்கள் என சினிமா ரசிகர்களுக்கு அன்லிமிட்டெட் மீல்ஸாக அமைந்தது அந்தக் காலம். அதே காலத்தில் சினிமாவில் அறிமுகமானவர்தான் பூர்ணிமா பாக்யராஜ். தான் சினிமாவில் அறிமுகமானது, தனது கணவர் பாக்யராஜை சந்தித்தது என சுவாரஸ்யமான பல தகவல்களைப் பகிர்கிறார் பூர்ணிமா. 



“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பாம்பேயில். எனக்கு ஹிந்தி தெரிந்த அளவுக்கு வேற எந்த மொழியும் பேசத் தெரியாது.என் அம்மாவுக்கு சினிமா ஆர்வம் உண்டு, எனக்கு டான்ஸ் மியூஸிக் ஆர்வம் உண்டு. சில காலம் பாட்டு கற்றுக் கொண்டேன். டான்ஸ் க்ளாஸ் சென்றேன். மும்பையில் வளர்ந்ததால் ராஜேஷ் கண்ணா, தேவ் ஆனந்த போன்ற நடிகர்களை சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. அப்போதுதான் என்னுடைய புகைப்படம் மலையாள திரைப்பட உலகைச் சென்றடைந்திருக்கு. இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க என்னை அழைப்பதாகத் தகவல் வந்தது. ஸ்க்ரீன் டெஸ்டுக்குச் சென்றேன். மலையாளத்தில் ஸ்க்ரிப்ட் இருந்தது. எனக்கு மலையாளம் தெரியாது. அதனால் முகத்தில் பாவத்தை மட்டும் வெளிப்படுத்த சொன்னாங்க. எப்படியும் தேர்வாக மாட்டோம்னு நினைச்சுட்டு வீட்டுக்கு வந்தேன். ஆனால் இரண்டாவது நாளே ஷூட்டிங்குக்கு வரும்படி அழைப்பு வந்தது. காலேஜ் ஃபைனல் இயர் படிப்பை விட்டுட்டுப் போக முடியாது. ஆனால் 25 நாள்தான் ஷூட்டிங்னு எங்க அம்மா அழைச்சுட்டு போனாங்க. கொடைக்கானலில் சூட்டிங். முதல் நாள் பயமாக இருந்தது. அவங்க பேசும் மொழி புரியலை. ஆனாலும் எல்லோரும் என்னை அன்பாகப் பார்த்துக்கிட்டாங்க.


என்னுடைய கதாப்பாத்திரத்தின் பெயர் ப்ரபா.அதைக்கொண்டே சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் என்னை அழைக்க ஆரம்பிச்சாங்க. ஷாட் ஒழுங்கா வந்திருக்கானு கூட எனக்குத் தெரியாது. சூட்டிங்கில் என்னைத் தவிர என்னுடன் நடிச்ச எல்லோருமே சிறப்பா நடிச்சதா எனக்குத் தோனும். நான் நல்லா நடிச்சேனா இல்லையானு கூட என்னிடம் சொல்லமாட்டாங்க. இயக்குநர் பாசில், கேமிரா அசோக் குமார் என பெரிய பட்டாளமே இருந்தாங்க. படம் சூட்டிங் முடிஞ்ச அன்றைக்குதான் சென்னையில் இருந்து அழைப்பு, ஒரு இயக்குநர் பெயர் பாக்யராஜ்..அவர் படத்தில் நீங்க நடிக்க முடியுமானு கேட்கறாங்கனு... எல்லோரும் எனக்கு சிபாரிசு செய்ங்க ப்ளீஸ் என என்னைச் சுற்றி இருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டே அந்த அழைப்பை எடுத்தேன்.


அப்படித்தான் எங்களுடைய முதல் உரையாடல் தொடங்கிச்சு. மலையாளத் திரைப்படத்தில் நடிச்சதால் எனக்குத் தமிழ் தெரியாதுனு நினைச்சு அவர் பேசத் தொடங்கினார். நான் தமிழிலேயே பேசத் தொடங்கினதும் அவருக்கு ஆச்சரியம்.எங்களுடைய முதல் அறிமுகம் அப்படித்தான்” என்றார் பூர்ணிமா.