நெகட்டிவ் செய்திகள் தான் பரபரப்பாகின்றன என நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில்‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர்.
1970-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அண்மையில் வெளியானது. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்தது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்துள்ளன. இந்நிலையில் இந்தப் படம் பற்றி அண்மையில் பூஜா ஹெக்டே ஒரு பாலிவுட் செய்தித் தளத்திற்கு பேட்டியளித்தார்.
அப்போது, “நான் நினைக்கிறேன் நெகட்டிவ் செய்திகள் தான் அதிகமாக கவனம் ஈர்க்கின்றன என்று. பிரபாஸுக்கும் எனக்கும் மோதல் என்ற தகவல் உண்மையானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்களுக்கு ஏனோ வதந்திகள் தான் பிடிக்கிறது. இப்போது நான் ஏதாவது கருத்து கூறினால் அதனால் எனது சமூகவலைதள பக்கங்கள் அதிரும். ஏற்கெனவே அது எதிர்மறை கருத்துகளால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் நான் அதில் சேர்க்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.
அப்போதே மறுத்த படக்குழு..
படம் வெளியாவதற்கு முன்னர் இருந்தே இந்த சர்ச்சை நீடித்து வருவதால் ராதே ஷ்யாம் படக்குழு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதில், "பூஜா ஹெக்டேவுக்கும் பிரபாஸுக்கும் இடையே பிரச்சினை என்று வெளியாகும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. அவர்கள் இருவருமே பரஸ்பரம் மரியாதையும், தொழில் ரீதியாக ஈர்ப்பும் கொண்டவர்கள். படப்பிடிப்புத் தளத்தில் இருவரும் சிறந்த முறையில் நட்பு பாராட்டுவர். அவர்களுக்குள் இருக்கும் நட்பு திரையில் நல்ல கெமிஸ்ட்ரியாக வெளியாகிறது.
சினிமாத்துறையில் கிசுகிசுக்களுக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது அல்லவா? அப்படித்தான் இந்த வதந்தியும் பரவியுள்ளது. பூஜா ஹெக்டே எப்போதுமே படப்பிடிப்புத் தளத்திற்கு குறித்த நேரத்திற்கு வந்துவிடுவார். அவருடன் பணியாற்றுவது மிகவும் எளிதானது. அதனால், பூஜாவுக்கும், பிரபாஸுக்கும் மோதல் போன்ற வதந்தியெல்லாம் வேண்டாதவர்கள் சிலரின் கற்பனைக் கட்டுக்கதை. இருவரிடையே எந்த ஒரு பிளவும் இல்லை. ஒட்டுமொத்த குழுவும் பட வெளியீட்டை எதிர்பார்த்துள்ளது. நாங்கள், ரசிகர்களுக்கு விருந்துபடைக்கக் காத்திருக்கிறோம். இந்தப் படத்தை அவர்கள் மறக்கவே மாட்டார்கள்" என்று கூறியிருந்தது.
ஆனாலும், படப்பிடிப்பு தளத்தில் பூஜாவைப் பார்த்தாலே பிரபாஸ் எரிச்சலடைவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இப்போது படம் வெளியான பின்னரும் கூட பிரபாஸ், பூஜா ஹெக்டே சண்டை பேசப்படுகிறது.