என்னதான் பீஸ்ட், ராதே ஷ்யாம் என பூஜா ஹெக்டேவின் படங்கள் அடுத்தடுத்து எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கி இருந்தாலும், இப்படங்களின் ஹீரோயின் பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டு ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.




இயக்குநர் மிஷ்கினின் முகமூடி படத்தின் மூலம் 2012ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. முதன் முதலில் இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நிலையில், முதல் படமான ‘முகமூடி’ விமர்சனரீதியாக பாராட்டுகளைப் பெற்று வணிகரீதியாக பெரும் தோல்வியைத் தழுவியது.


இதனையடுத்து கோலிவுட்டில் பூஜா கண்டுகொள்ளப்படாமல் சென்ற நிலையில், இந்தி, தெலுங்கு திரை உலகுக்குள் பூஜா அடியெடுத்து வைத்தார்.


நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஜோடியாக அவர் இந்தியில் அறிமுகமான ’மொகஞ்சதாரோ’ படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனினும் தெலுங்கில் இவ்வாறான தோல்விகளை சந்திக்காத பூஜாவை தெலுங்கு ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கினர்.


அதனைத் தொடர்ந்து டோலிவுட்டில் தன் கோட்டையை விஸ்தாரித்த பூஜா ஹெக்டே, கிட்டத்தட்ட அனைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.




முன்னதாக அல்லு அர்ஜூனுடன் இவர் இணைந்து நடித்த ’அல வைக்குந்தபுரம்லோ’ படமும் அப்படத்தில் இடம்பெற்றிருந்த ’புட்ட பொம்மா’, ’ராமுலோ ராமுலா’ உள்ளிட்ட பாடல்களும் இவருக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தன.


அதனைத் தொடர்ந்து விஜயின் ’பீஸ்ட்’ படத்தின் மூலம் பூஜா ஹெக்டே மீண்டும் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும், தான் அறிமுகமாகி ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்ட கோலிவுட்டில் தற்போது மீண்டும் இன்று கோலோச்சத் தொடங்கியுள்ளார் பூஜா ஹெக்டே.


தமிழ் தவிர்த்து மகேஷ் பாபு, சல்மான் கான் என டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேரும் பூஜா, தனது பிசி ஷூட்டிங்குக்கு மத்தியில் முன்னதாக வெளிநாட்டுப் பயணம் சென்றிருந்தார். ஆனால் இன்பச்சுற்றுலாவில் இருந்து காலில் அடிபட்டு பூஜா திரும்பியதோடு, அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு தன் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார்.  


 






இந்நிலையில், கடந்த சில வாரங்களில் உடல்நலன் தேறி மீண்டும் தனது ரெகுலர் ஒர்க் அவுட் வாழ்வுக்கு  தற்போது திரும்பியுள்ளார் பூஜா. முன்னதாக மும்பை, பாந்த்ரா பகுதியில் காலில் கட்டுடன் காரில் வந்திறங்கிய பூஜாவின் வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.