பொன்னியின் செல்வனில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலங்கள் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.


கடந்த 2022 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமும், 2023 ஆம் ஆண்டு அப்படத்தின் 2ஆம் பாகமும் வெளியானது. லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்த இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபாலா, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஜெயசித்ரா, பிரகாஷ்ராஜ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். 


இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் இளம் வயது விக்ரமாக சந்தோஷ் என்பவர் நடித்திருந்தார். அதேபோல் குட்டி ஐஸ்வர்யா ராய் ஆக சாரா அர்ஜூனும் நடித்திருந்தனர். டிக்டாக் மூலம் பிரபலமான சந்தோஷ் மாடலிங்கிலும் ஆர்வம் செலுத்திய நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடிஷனுக்கு சென்றிருந்தார். அவரின் நீண்ட தலைமுடியும், கட்டுக்கோப்பான உடலும் விக்ரம் நடித்த ஆதித்ய கரிகாலன் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தது. 


இதேபோல் 2010 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் அவருக்கு மகளாக சாரா அர்ஜூன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்படம் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து சைவம், விழித்திரு, சில்லுகருப்பட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் சாரா அர்ஜூன் நடித்துள்ளார். 


புதிய படத்தில் சந்தோஷ் - சாரா


இந்நிலையில் சந்தோஷ், சாரா அர்ஜூன் இருவரும் புதிய படம் ஒன்றில் ஜோடியாக நடிக்கவுள்ளார்கள். இந்த படத்தை சனா மரியான் என்ற அறிமுக பெண் இயக்குநர் இயக்கி தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். இவர் வேறு யாருமல்ல. தமிழில் 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மறைந்த இயக்குநர் ஜீவாவின் மகளாவார். இந்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி மற்றும் குஷ்பூவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க ரொமான்ஸ் அடிப்படையில் இந்த படம் தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சனா மரியம் இயக்கும் இந்த புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.