மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ் , ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவிய திரைக்கதை என்றாலும் மணிரத்னம் எவ்வாறு அதை காட்சிப்படுத்த போகிறார் என்ற ஆவல் அனைவருக்கும் இருந்தது.
பொன்னியின் செல்வன் நாவலில் மிகவும் முக்கியமான மற்றும் அழுத்தமான கதாபாத்திரம் என்றால் அது பொன்னியின் செல்வி நந்தினி தான்! வீரம், செழிப்பு என அனைத்திலும் சிறந்து விளங்கும் சோழ பேரரசை ஒரு பெண் தன் நயவஞ்சகத்தால் வீழ்த்தினாள் என்றால் அது நந்தினியால் மட்டுமே சாத்தியம்…இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாவலிலும் சரி படத்திலும் சரி நந்தினியின் கதாபாத்திரம் மறக்க முடியாத ஒன்றாக நிச்சயம் இருக்கும்.
அழிவின் தொடக்கம் - நந்தினி !
அழகும் அறிவும் ஒரு சேர அமைந்த பேரழகி அவள். அழகு ஆபத்தானது என்ற உவமைக்கு உயிர் கொடுத்தது போல அவளது வசீகரிக்கும் கண்களுக்குள் பெரும் வஞ்சகம் மறைந்திருக்கும். பார்ப்போரை மெய்மறந்து ரசிக்க வைக்கும் அவளது பேரழகு. பேரழகின் மறு உருவமான நந்தினி அழிவின் தொடக்கம்.
நயவஞ்சகம், பழி வாங்கத் துடிக்கும் நெஞ்சம், தீரா வலி, கைகூடா காதல், இழப்பு எனப் பல உணர்வுகளை மனதில் சுமந்து கொண்டு கண்ணில் கர்வமும் நடையில் நளினம் கலந்த கம்பீரமும் பேச்சில் நிதானமும் மொத்தத்தில் அழகும் அழிவும் உருவாய் அமைந்தவள் நந்தினி… யார் நந்தினி? பழுவூர் ராணியா? ஆதித்த கரிகாலனின் பால்ய பருவ காதலியா? சோழர்களைப் பழி வாங்கத் துடிக்கும் பாண்டிய நாட்டு பெண்ணா?
இளம் மன்னன் வந்தியத்தேவனில் இருந்து வயதான கெழம் பெரிய பழுவேட்டரையர் வரை நந்தினியின் அழகில் மயங்காத ஆண்களே இல்லை. நந்தினியின் ஒரு வார்த்தைக்கு வரிசை கட்டி நிற்பார்கள் ஆண்கள்; ஆதித்த கரிகாலனோ அவள் காதலை பெற்று இழந்தவன்...அந்த வலி அவ்வளவு எளிதா???
நந்தினி மிளிர்கிறாள் !
நந்தினி கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராய் சிறந்த தேர்வு என்றே கூற வேண்டும். நடிப்பில் அவ்வளவு நேர்த்தி, பார்வையில் கர்வம், நடையில் கம்பீரம், நயவஞ்சக சிரிப்பு, சுட்டெரிக்கும் கண்கள் என நந்தினி கல்கியின் ஓவியம் என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை பெருமை வாய்ந்த கதாபாத்திரத்திற்கு தனது சிறந்த நடிப்பின் மூலம் மரியாதை செலுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராய்…
வந்தியத்தேவனை தனது நய வஞ்சகத்தால் பேசி மயக்கும் காட்சிகளும், பெரிய பழுவேட்டையரிடம் மிக சாதுர்யமாக ஆலோசனை கூறும் காட்சிகளும் நந்தினியின் வில்லத்தனத்தை கூட ரசிக்க வைத்தது. மனதில் வஞ்சம் நிறைந்த போதும் குந்தவையை நேருக்கு நேராக புன்னகையுடன் வரவேற்கும் காட்சிகளில் ஓர் அரசியின் கம்பீரம் அவள் கண்களில் மின்னுகிறது. நந்தினி சோழ அரியணையை பார்த்து ஏங்கும் காட்சியில் ஐஸ்வர்யா ராய் நந்தினியின் பல வருட ஏக்கத்தையும் வலியையும் ஒரு பார்வையில் கடத்தி விட்டார் என்றே கூறலாம்.
வில்லி தான்...ஆனால் வெறுக்க முடியாத வில்லி ! ரசிக்க வைக்கும் வில்லி!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வி நந்தினியே மிளிர்கிறாள்..