பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் இயக்குனர்கள் மிஷ்கின், ஷங்கர் ஆகியோர் படக்குழுவினருடன் கலந்துகொண்டனர். படத்தில் நடித்த நட்சத்திர பட்டாளமே அவ்வளவு பெரிது என்பதால் தமிழ் திரைத்துறையே கூடிய கூடலாக இது அமைந்தது.
பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீடு
பொன்னியின் செல்வன் படத்தை 3 ஆண்டு கடின உழைப்புக்கு பின் எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்திற்கு இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கு ஏற்றார் போல் படத்தையும் படக்குழு பிரம்மாண்டமாக புரமோட் செய்து வருகின்றனர். இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்த விழாவில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஜினிகாந்த்திற்கு பலத்த வரவேற்பு அளிக்கப் பட்டது. அவர் காலை மரியாதை நிமித்தமாக தொட்டு வணங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த கமல்ஹாசனும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கட்டித் தழுவிக் கொண்டது ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
அதுமட்டுமின்றி கமல்ஹாசன் வருகையை கண்டு பூரித்த ரசிகர்கள் விக்ரம்… விக்ரம்… என்று கத்தி அரங்கையே அதிர வைத்தனர்.
விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை தொகுதி எம்பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசனும் பங்கேற்றார். அவருடைய வேள்பாரி நாவலை பற்றி ரஜினிகாந்த் மேடையில் பெருமையாக பேசினார். இந்த விழாவிற்கு தந்தையும் மகனுமாக ஜெயராமும், காளிதாஸ் ஜெயராமும் வருகை தந்தனர்.
கருப்பு உடையில் அழகின் பிரம்மாண்ட உருவாய் வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் செய்தியாளர்களிடம் இந்த விலைமதிப்பற்ற படத்தில் நடித்தது மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் தருகிறது என்றார்.
இந்த பிரம்மாண்ட விழாவிற்கு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வருகை தந்திருந்தார். சிறப்பு விருந்தினராக வந்த அவரை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவர் லைக்கா தயாரிப்பில் கமலை வைத்து இந்தியன் பாகம் 2 இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்விற்கு நடிகை த்ரிஷா பிங்க் நிற உடையில் வந்திருந்தார். அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்திருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
"மணி சார் சொல்லிக் கொடுத்ததுபோல் நடித்தேன்; இவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம்!" - நடிகர் 'ஜெயம்' ரவி
எல்லோரும் நன்றாக பேசி விட்டார்கள். நாம் என்ன பேசுவது என்று நினைக்கும்போது, இந்த நேரத்துல வீரர்கள் சொல்லும் வார்த்தை, பார்த்துக்கலாம் என்ற கமல் சார் டயலாக் நினைவிற்கு வந்தது.
இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று அனைவரும் கேட்டார்கள். எனக்கு தெரியாது, மணிரத்தினம் கூப்பிட்டார், சென்றேன், நடித்தேன் என்று கூறினேன். இந்த கதாபாத்திரம் கிடைப்பதற்கு நான் அப்படி என்ன நல்லது செய்து விட்டேன் என்று தோன்றியது. ஆனால், நான் சொல்லும்படி அப்படி ஒன்றும் நல்லது செய்யவில்லை. ஒருவேளை அப்பா அம்மா செய்த நல்ல விஷயங்களால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று நினைத்தேன். அதுதான் உண்மை.
பிறகு இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்தேன். உனக்கு கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது.. என்ற ரஜினி சார் டயலாக் தான் நினைவிற்கு வந்தது.
மேலும் இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்த போது, நான் சினிமாத் துறைக்கு வந்து 20 வருடங்களாகிறது. நீண்ட வருடங்களாக உழைத்திருக்கிறேன், அதன் பலனாகத்தான் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது எனக்கு தோன்றியது. கமல் சாரும் ரஜினி சாரும் பல ஆண்டுகள் தங்கள் உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட உழைப்பால் தான் எனக்கு இந்த படம் கிடைத்திருக்கிறது என்றும் நான் நம்புகிறேன். அதைத் தாண்டி உங்களுடைய ஆதரவும், இறைவனுடைய அருளும் எனக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பேச்சால் ஒருவரை மாற்றமுடியுமா? என்று நினைத்தேன். ஆனால், அது மணி சாரால் முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன். ஏனென்றால், அருண்மொழிவர்மன் யார் என்பதை நான் கூறும்போது நீ இடையில் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேள் என்று கூறினார். மக்களிடம் எப்படி இருப்பான், அக்காவிடம் எப்படி இருப்பான், மற்ற ராஜாக்களிடம் எப்படி இருப்பான் என்று ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டே வந்தார். அவர் சொல்லி முடித்ததும் ஒரு மூட் கிரியேட் ஆச்சி. அப்படியே வீட்டுக்கு சென்றேன். எப்போது பாத்தாலும் ஆதே மூடில் இருந்தேன். இதுனானல் வீட்டில் திட்டு வாங்கினேன். அது வேறு வழி இல்லை. ஆறு மாதத்தில் அதே மூடில் அவர் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன்.
இவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம். மிக்க நன்றி சார்.
கார்த்தி இந்த படத்தின் மூலம் சிறந்த நண்பன் ஆகிவிட்டான். அவன் வளர்வதைப் பார்க்க பிடிக்கும். விக்ரம் சார் உலகளவில் பேசப்பட வேண்டும் மனதார வேண்டிக் கொள்கிறேன்.
விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் சார் மற்றும் அனைவருடனும் நடித்ததில் மகிழ்ச்சி. லைகா சுபாஸ்கரனுக்கு நன்றி என்றார்.
படத்தைப் பற்றி நான் கூறும்போது அலாதியான இன்பம் வருகிறது; இந்த வாய்ப்பை அளித்த மணி சாருக்கு நன்றி! - நடிகை திரிஷா
இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது முதலில் என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. ரஜினி சார் கமல் சாரை எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் வாவ் என்றே சொல்ல வைக்கிறது.
2K கிட்ஸ் முதல் அனைவருக்குமே இந்த படம் சிறப்புரிமை, ஆசீர்வாதம், சிறந்த படம் என்று நான் என்ன வார்த்தை கூறினாலும் எனக்கு அது குறைவாகவே தோன்றுகிறது. அதைத்தாண்டி அதற்கு குறவாகவே தோன்றுகின்றது. அதை தாண்டி உள்ளுக்குள் ஒரு அலாதியான இன்பம் வருகிறது.
இந்த வாய்ப்பை கொடுத்த மணி சாருக்கு மிக்க நன்றி என்றார்.