பொன்னியின் செல்வன் என்கிற பெயரை இன்று உச்சரிக்காத ஆளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு, பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. கல்கி எழுதி பொன்னியின் செல்வம் திரைப்படத்தை எம்.ஜி.ஆர்., இயக்கி நடிக்க முயற்சித்தார். அதற்கான முயற்சியும் எடுத்தார், ஆனால், விபத்து ஒன்றில் காரணமாக அவரால் அந்த முயற்சியை தொடர முடியாமல் போனது. பல ஆண்டுகளுக்குப் பின் இயக்குனர் மணிரத்தினம் அந்த முயற்சியை முடித்திருக்கிறார்.




முதல் பாகம் வெளியீடுக்கு தயாராகிவிட்டது. ஆனால், சத்தமே இல்லாமல் 2005ல் ஒரு பொன்னியின் செல்வம் வெளியானது. அது கல்கியின் பொன்னியின் செல்வன் அல்ல. ராதாமோகனின் பொன்னியின் செல்வன். நல்ல தரமான குடும்ப படைப்புகளை வழங்கிய இயக்குனர் ராதாமோகன், 90களின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியத் திரைப்படம் தான், பொன்னியின் செல்வன். 


ஸ்ரீ சூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்தினத்தின் மகன் ரவி கிருஷ்ணாவை கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட்ட படம். கதாநாயகியாக ‛ஆட்டோகிராப்’ புகழ், கோபிகாவும், அம்மா கதாபாத்திரத்தில் ரேவதியும் நடித்திருப்பார்கள். தாய் வளர்ப்பில் இருக்கும் ஒரு இளைஞன், தன்னம்பிக்கை இல்லாமல், தன் மீது நம்பிக்கை இல்லாமல் சுற்றி வருவதும், பின்னர் அவன் சந்திக்கும் ஒரு நட்பு, அவனை மேலே உயர்த்தி, வாழ்வில் ஜெயிக்க வைப்பது தான், பொன்னியின் செல்வன் கதை.


பொன்னியாக நடிகை ரேவதி, ரவிகிருஷ்ணாவின் அம்மாவாக கலக்கியிருப்பார். நண்பனை காதலனாக உயர்த்தி, அவனை வெற்றி பெற்றவனாக மாற்றுவதில் கோபிகாவும், வழக்கமான ராதா மோகனின் கூடாரங்களும் இணைந்து, ஒரு சாதனை இளைஞனை சுற்றி வலம் வரும் படம். 




இசையமைப்பாளர் வித்யாசாகரின் இசை, படத்திற்கு பெரிய ப்ளஸ். குறிப்பாக, ‛சிறு தூரல்’ மெலோடி பாடல், எப்போதும் கேட்கும் ரகம். இது தவிர, இன்னும் பல ஊக்கப்படுத்தும் பாடல்களும் உண்டு. சீனிவாசனின் கேமராவும், காசி விஸ்வநாதனின் எடிட்டிங்கும் படத்திற்கு பெரிய பலம். பெரும்பாலான காட்சிகள் ஸ்டூடியோவுக்குள் எடுக்கப்பட்டிருக்கும்; அப்போது வந்த படங்கள் அப்படி தான் எடுக்கப்பட்டன. 


படத்தின் பெரிய மைனஸ், ஹீரோ ரவி கிருஷ்ணா என்று அப்போதே பேசப்பட்டது. அவருக்கு பொதுவாகவே நடிப்பு, நார்மலாக தான் வரும். இந்த படத்திலும், அதே 7 ஜி ரெயில்போ காலனி கதிராகவே தன்னை காட்டியிருப்பார். வேறு நடிகர் யாராவது இருந்தாலும், இன்னும் கூட பொன்னியின் செல்வன் பேசப்பட்டிருக்கும், 


மகனுக்காக தந்தை தயாரித்த படம், அதை தவிர்த்து பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. ஆனாலும், அதை கடந்து ரேவதி, பிரகாஷ்ராஜ், கோபிகா போன்றவர்களின் நடிப்பு, படத்தை வேறு கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. இன்று கொண்டாடப்படும் அளவிற்கு அன்று பொன்னியின் செல்வன் தலைப்பு பேசப்படவில்லை; அதற்கு காரணம், ஹீரோவும் ஒரு காரணமாக இருக்கலாம். 12 கோடி செலவில் உருவான இத்திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது ஹீரோவின் தந்தை ஏ.எம்.ரத்தினத்திற்கு தான் தெரியும்.