இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் இயக்குநர் மணி ரத்னத்தால் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. தமிழ் சினிமாவின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. மேலும் இப்படம் வசூலில் 500 கோடியை தாண்டியதாக சொல்லப்படுகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. 


நட்சத்திர பட்டாளம் 


பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி,விக்ரம், த்ரிஷா, பிரபு, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு,ஜெயராம், லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள  இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கான ப்ரோமோஷன்களும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வந்தது. 


முன்னதாக  சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன்,சிலம்பரசன்,  இயக்குநர் பாரதிராஜா, அமைச்சர் துரை முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் அனைவரையும் கவர்ந்தது.  இதனையடுத்து கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் குரலில் 2 ஆம் பாகத்தின் தொடக்க காட்சிகள் இடம் பெற்றிருந்தது. 


இதனைத் தொடர்ந்து படத்தின் ஸ்னீக் பீக் காட்சி நேற்று முன்தினம் (ஏப்ரல் 26) ஆம் தேதி வெளியானது. இதில் வந்தியத்தேவன் (கார்த்தி) மற்றும் ஆழ்வார்க்கடியன் நம்பி (ஜெயராம்) தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இப்படியான நிலையில் நேற்று பொன்னியின்  செல்வன் படத்தில் நடித்த ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, பார்த்திபன், ஷோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பங்கேற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. 


இதில் பேசிய அனைவரும் பட ஷூட்டிங்கில் நடைபெற்ற சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் அனைவருமே கண்கலங்கினர். மேலும் நெகிழ்ச்சியாக பேசினர். 


சிறப்பு காட்சிகள் இல்லை


பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு காலை 5 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், 2 ஆம் பாகத்திற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். இந்த படத்திற்கு முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படுகிறது. அதேசமயம் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த நிலை நிலவுகிறது.


அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் படம் இன்று (ஏப்ரல் 28 ஆம் தேதி) அதிகாலை 1:30 மணிக்கும், கேரளா மற்றும் கர்நாடகாவில் படத்திற்கு காலை 5 மற்றும் காலை 6 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.