‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரும் ஏப்ரல்.28ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் முழு வீச்சில் ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு சென்ற ஆண்டு செப்டெம்பர் 30ஆம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று.
ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி,ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ஜெயராம், ரகுமான், பார்த்திபன், ஷோபிதா, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர், கிஷோர் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சுமார் 500 கோடி வரை வசூலித்து சென்ற ஆண்டின் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது.
தொடர்ந்த 2023 சம்மர் ஸ்பெஷலாக பொன்னியின் செல்வன் 2 வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறத் தொடங்கின. அதன்படி கடந்த மாதம் தொடங்கி பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான அப்டேட்கள் படையெடுக்கத் தொடங்கின.
முதலில் 'அகநக' லிரிக்கல் பாடல் வெளியான நிலையில், தொடர்ந்து பொன்னியின் செல்வன் டீசர், ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, வீர ராஜ வீரா, சிவோஹம் லிரிக்கல் பாடல்கள், கதாபாத்திர மேக்கிங் வீடியோக்கள் என லைகா ப்ரொடக்ஷன்ஸ் வரிசைகட்டி அப்டேட்களை இறக்கி வருகிறது.
அந்த வரிசையில் நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் பொன்னியின் செல்வன் பாகங்களுக்கான பி எஸ் ஆந்தம் பாடல் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மையக்கருவை விளக்கும் வகையில் இந்தப் பாடல் வெளியானது.
மேலும் பொன்னியின் செல்வன் 2 இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகள் நேற்று (ஏப்ரல்.15) சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் நேற்று தொடங்கி கோவை, சென்னை, டெல்லி, கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, திருச்சி மீண்டும் சென்னை என தொடர்ந்து ப்ரொமோஷன் பணிகளில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், இன்று த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கோவை பயணிக்கும் புகைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் பகிர்ந்துள்ளது.
படம் வெளியாக இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் நாடு முழுவதும் பயணித்து ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.