90களில் வில்லனாக நடித்து ரசிகர்களை வியக்க வைத்தவர் பொன்னம்பலம். அவரது வில்லத்தனமான நடிப்பும், உடல் மொழியுமே அச்சத்தை தரும். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் பொன்னம்பலம். கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் இவர், தற்போது அளித்திருக்கும் பேட்டியில் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளார். 

Continues below advertisement


மக்களை ரசிக்க வைத்தது பெருமை


சமீபத்தில் சிறுநீரக கோளாறால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொன்னம்பலம் உடல்நலம் தேறியுள்ளார். இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஸ்டண்ட் கலைஞராக இருந்தது மட்டும் இல்லாமல் மக்களை மகிழ்விக்கும் கலைஞராக இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். அதனால் தான் இப்போது வரை வாழ்ந்து காெண்டிருக்கிறேன். என்னை பல பேர் ஏமாற்றி இருக்கிறார்கள். அதையும் கடந்து வந்துவிட்டேன் என தெரிவித்தார். 


என் எதிரிக்கு கூட வரக்கூடாது


மேலும் பேசிய அவர், என் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது நடிகர்கள் தனுஷ், சரத்குமார், அர்ஜூன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் உதவி செய்தார்கள். அவர்களது உதவியால் உயிர் பெற்றேன். அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதை சொல்லிக்காட்டக் கூடாது. அவர்கள் செய்தது என் தேவையை விட அதிகமானது. சிறுநீரக கோளாறு ஏற்பட்டு ஒரு நாளைக்கு 2 முறை டயாலிசிஸ் செய்கிறேன். என் எதிரிக்கு கூட இந்த நிலமை வரக்கூடாது. இந்தக் கையில் 750 ஊசிக்கு மேலே போட்டிருக்கிறேன். உடம்பு ரணமாகிடும். பிடித்த உணவை கூட சாப்பிட முடியாமல் அவதிப்பட்டேன். உலகத்திலேயே மிகப்பெரிய தண்டனையாக இதை பார்க்கிறேன் என தெரிவித்தார். 


சிரஞ்சீவி என் கடவுள்


இதைத்தொடர்ந்து சினி உலகில் பலரும் எனக்கு உதவி செய்தார்கள். ஆனால், சிரஞ்சீவி செய்த உதவியை என் வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டேன். இதுவரை அவர் செய்த உதவி கோடியை தாண்டியிருக்கும். அவர் என் கடவுள். ரூ.1.15 கோடி வரை செலவு செய்திருக்கிறார். சினிமாவை பொறுத்தவரை ஸ்டண்ட் கலைஞர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபமானது. உச்சபட்ச ரிஸ்க் எடுப்பது ஸ்டண்ட் கலைஞர்கள் தான். அவர்களது உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. அதிக புரோட்டின் சாப்பிடுவதால் கிட்னி பிரச்னை ஆகலாம் என பொன்னம்பலம் தெரிவித்தார்.


எம்ஜிஆருக்கு பிறகு விஜயகாந்த்


விஜயகாந்த் குறித்து பேசிய பொன்னம்பலம், எம்ஜிஆருக்கு பிறகு ஸ்டண்ட் கலைஞர்கள் மீது அதிக அன்பு கொண்டவர் விஜயகாந்த் தான். கமல்ஹாசன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ஸ்டண்ட் காட்சியில் கால் அடிபட்டது. இதை கேள்விப்பட்ட எம்ஜிஆர் உடனே கமல்ஹாசனை நேரில் சந்தித்து முகம் தான் மூலதனம். இனிமேல் இதுபோன்ற ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டாராம். அப்படி பல இருக்குங்க என பொன்னம்பலம் தெரிவித்தார்.