தமிழ்நாடு தொடங்கி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை இன்று கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
சூரியப் பொங்கல் வைத்து குலவையிட்டு தங்கள் விவசாயிகளுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவித்து பொங்கல் விழாவினை இன்று தமிழ் மக்கள் கொண்டாடும் நிலையில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோர் உலகம் முழுவதும் தமிழ் மக்களுக்கு தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
ரஜினியின் வித்தியாசமான பொங்கல் வாழ்த்து
அந்த வகையில் முன்னதாக சென்னை, போயஸ் கார்டனில் உள்ள தன் இல்லத்தின் முன் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் தன் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தினைப் பகிர்ந்தார்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள், அனைவரும் மன நிம்மதியுடன் நெகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் எனக் கூறி வாழ்த்தி தன் ரசிகர்களிடமிருந்து விடைபெற்றார். தொடர்ந்து தன் இல்லத்திலிருந்து தன் வழக்கமான ஸ்டைலில் இருகரம் தூக்கி ரசிகர்கள் ஆர்ப்பரிக்க நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தினார்.
விம்மிதம் கொள்ளும் நாள்
அதேபோல் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து தன் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள்,
விதைத்த பொருளின் விளைச்சலைப் பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள், சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக்கொண்டாடும் நாள் என மகிழ்வுகளை அள்ளிவரும் தைப்பொங்கல் நாளில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.