பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வெளியாகியுள்ள 4 படங்களின் 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன என்பதை காணலாம்.
பொங்கல் படங்கள்
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழில் 4 புதுப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எல்லாம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களும் வரப்போகும் நாளில் படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பொங்கல் படங்களில் வசூலை வாரிக்குவிப்பது எந்த படங்கள் என பார்க்கலாம்.
கேப்டன் மில்லர்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், வினோத் கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “கேப்டன் மில்லர்”. சத்யஜோதி நிறுவனம் தனுஷை வைத்து 4வது முறையாக தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் மட்டுமே வெளியாகியுள்ளது. இதனிடையே படமானது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கேப்டன் மில்லர் படம் முதல் நாளில் ரூ.8.7 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்ட நிலையில், 2வது நாளில் ரூ.6.75 கோடி வசூல் செய்ததாக sacnilk தளம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயலான்
ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், சரத் கேல்கேர், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “அயலான்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் ஏலியன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட விஷூவல்களுடன் வெளியாகியுள்ள அயலான் படம் குழந்தைகளை அதிகளவில் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ரூ.3.2 கோடி வசூல் செய்த நிலையில், 2வது நாளில் வசூல் ரூ.4.25 கோடியாக அதிகரித்துள்ளது.
மிஷன் சாப்டர் 1
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “மிஷன் சாப்டர் 1”. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் அருண் விஜய்யின் முதல் பண்டிகை வெளியீடு படமாகும். இந்த படம் முதல் நாளில் ரூ.20 லட்சம் வசூல் செய்த நிலையில் 2வது நாளில் அது ரூ. 1கோடி வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெரி கிறிஸ்துமஸ்
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே, சண்முக ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “மெரி கிறிஸ்துமஸ்”. இந்த படத்துக்கு ப்ரீதம் இசையமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லரை மையப்படுத்திய இப்படம் இந்தி - தமிழ் ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழில் முதல் நாளில் ரூ.22 லட்சமும், 2வது நாளில் ரூ.31 லட்சமும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
வசூல் குறைய என்ன காரணம்?
இப்படி பொங்கல் படங்கள் வசூல் குறைய என்ன காரணம் என தியேட்டர் தரப்பில் கேட்டபோது, ‘பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவதும், கடைவீதிகளில் பொருட்கள் வாங்க நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இன்னும் நாளை பொங்கல் பண்டிகை முடியும் பட்சத்தில் தான் வசூல் அதிகரித்து அடுத்த ஒரு வாரத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும்” என தெரிவித்துள்ளனர்.