தமிழ்நாடு அரசியலில் ஆளும் கட்சிக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகள் கொடுக்கப்படுவதில்லை என முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவருமான பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியது தான் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. மக்கள் பணிக்காக இன்னும் 2 படங்களோடு நடிப்பதையும் நிறுத்திக் கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவோ, ஆதரவளிக்கவோ போவதில்லை என தமிழ்நாடு வெற்றி கழகம் தெரிவித்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என கூறியுள்ளதால் விஜய்யின் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


இப்படியான நிலையில் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவரான பழ.கருப்பையா விஜய் அரசியல் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில், “ஒவ்வொரு கட்சியும் மிகப்பெரிய கொள்கையுடன் தொடங்கி கூட்டணி வைத்து இன்று ஒன்று, இரண்டு இடங்களுக்காக கெஞ்சி கூத்தாடி வருகிறார்கள். இதனால் ஆளும் கட்சிகள் செய்யும் தவறுகளை எல்லாம் மூடி மறைக்கிறார்கள். இதனால் தமிழ்நாடு அரசியலில் ஆளும் கட்சிக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகள் கொடுக்கப்படுவதில்லை. இந்த நிலையில் தான் புதிய கட்சி தேவைப்படுகிறது என்ற நிலைப்பாடு உள்ளது. 


விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் வசதி என்னவென்றால், உச்ச நடிகராக இருக்கும் நிலையில் பணம் நிறைய வைத்திருக்கிறார். இரண்டாவதாக திமுக மாதிரியான கட்சிகள் மாநாடு நடத்தும்போது காசு கொடுத்து ஆட்களை கூட்டி வந்து மக்களிடம் பெரிய கட்சி என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். உண்மையான தொண்டர்கள் என்பதே இல்லை. ஆனால் விஜய்க்கு கூடுபவர்கள் அப்படி அல்ல.


விஜய்யுடன் நான் சர்கார் படத்தில் நடித்தேன். அவருடன் நல்ல பழக்கம் இருக்கிறது என்பதற்காக எல்லாம் ஆதரவு கொடுக்க முடியாது. அவருடைய கட்சியின் கொள்கையை பொறுத்துதான் அதை முடிவு செய்வேன். என்னை விட எதிர்க்கட்சியெல்லாம் சரியான வழியில் செயல்பட்டால் மக்கள் ஆதரவு கொடுப்பார்கள். 


ஒரு கட்சி வெளியே வரும்போது, அதாவது எதிர்க்கட்சிக்கு செல்லும் 10, 15% வாக்குகள் அங்கு செல்லும். அப்படித்தான் விஜயகாந்த அரசியலில் வந்தார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டபோதே அந்த கட்சி சரிவை சந்தித்தது. இப்போது அந்த வாக்குகளின் ஒரு பகுதி எல்லாம் எங்கே போகும் என தெரியாமல் சீமானுக்கு கிடைத்தது.  விஜய் போன்றவர்கள் வந்தால் சீமான் உட்கார்ந்து விடுவார். அவருக்கு கூவிக்கொண்டு திரியும் இளைஞர்கள் எல்லாம் இந்த பக்கம் வந்து விடுவார்கள். இதனால் சீமானுக்கு இருந்த வாக்கு வங்கி இருக்காது” என தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க:  TVK Vijay: திமுகவை விஜய் ஒழித்தால் அது மிகப்பெரிய தொண்டு - பழ.கருப்பையா ஆவேசம்!