அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் பார்க்க வந்த, ரேவதி என்கிற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அல்லு அர்ஜூன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தான் இன்று அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அல்லு அர்ஜுன் கைது:
அப்போது பேசிய அல்லு அர்ஜூன், தன்னை கைது செய்ய வந்த போலீசார் தன்னுடைய தனிப்பட்ட அறைக்குள் நுழைந்ததாக நீதிமன்றத்தில் தன் கோவத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், நான் உடை மாற்றிவிட்டு வருகிறேன். என்னுடன் ஒருவரை மட்டும் அனுப்புங்கள் என்று சொன்னேன். ஆனால், போலீசார் என்னை மதிக்கவில்லை. என்னுடைய பெட்ரூம் வரை வந்து விட்டார்கள் என்று கூறியுள்ளார்.
அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த கைது நடவடிக்கையை எதிர்த்து அல்லு அர்ஜுன் தரப்பில் இடைக்கால ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதி மன்றம் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கி அவரை கைது நடவடிக்கையில் இருந்து விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரூம் வரை வந்தனர் போலீசார்:
அல்லு அர்ஜுனை கைது செய்து போலீசார் அழைத்து செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது, அல்லு அர்ஜுன் தன்னுடைய படபடப்பை குறைப்பதற்காக டீயோ காபியோ குடித்துக் கொண்டு தன்னுடைய மனைவியை சமாதானம் செய்து கொண்டிருப்பது போன்ற ஒரு வீடியோ வெளியானது. மேலும் அந்த வீடியோவில் அல்லு அர்ஜுன் சகோதரர் அல்லு சிரிஷ் மற்றும் தந்தை அல்லு அரவிந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
கடந்த 5ஆம் தேதி திரைக்கு வந்த அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் புஷ்பா 2 படத்தின் போது சந்தியா திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது நிரம்பிய ரேவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரசிகை இறந்த செய்தியை கேள்வி பட்ட உடனே, அல்லு அர்ஜுன் அந்த பெண்ணின் மரணத்தால் மன வேதனை அடைந்ததாகவும், அவரது குடும்பத்தாரை நேரில் சந்திப்பதாகவும் அல்லு அர்ஜூன் கூறியிருந்தார். அதோடு அவரது குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி இருந்தார்.
அல்லு அர்ஜுன் கைதால் அரசியலில் பரபரப்பு:
ஆனால் தற்போது அல்லு அர்ஜுனின் கைது நடவடிக்கை, ரசிகர்கள், திரையுலக வட்டாரத்தை தாண்டி அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதும் அதற்க்கு KTR போட்ட பதிவும் தான் இந்த சம்பவத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது .