நடிகர் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திப்பதின் மூலம், தனது அரசியல் பிரவேசத்தை விரைவுபடுத்துவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


விஜய் தரப்பு அறிக்கை:


விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் “தளபதி விஜய்" சொல்லுக்கிணங்க, வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று "அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த "பத்து மற்றும் பணிரெண்டாம்" வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு "தளபதி விஜய்" மாணவ, மாணவிகளின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரியாணி விருந்தளித்த விஜய்:


இதனிடையே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில், வாரிசு படத்தின் விடுதலைக்கு முன்னதாக தனது ரசிகர்களை விஜய் சந்தித்தார். சென்னை அடுத்த பனையூரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற சந்திப்பில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜய் ரசிகர்கள் பங்கேற்றனர். அப்போது, மக்கள் இயக்கம் சார்பில் அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ரசிகர்களுக்கு ஆலோசனை வழங்கியதோடு, கூட்டத்தில் பங்கேற்ற ரசிகர்களுக்கு விஜய் சார்பில் பிரியாணி விருந்தளிக்கப்பட்டது.


பட்டினி தினத்தன்று உணவு விநியோகம்:


அதைதொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதமும் தனது ரசிகர்களை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்பு வெளியான அறிக்கையில், மே-28 ஆம் தேதி கடைபிடிக்கப்படும் உலக பட்டினி தினத்தையொட்டி,  அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து தான் தற்போது, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 3 மாணவர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.


தீவிரம் காட்டும் விஜய்?


இதற்கு முன்பெல்லாம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியாகும் அறிக்கையில் மாவட்ட வரியான நலத்திட்டங்கள் என தான் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால், கடைசியாக வெளியான 2 அறிக்கைகளிலும் தொகுதி வாரியாக என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, நகரம், ஒன்றியம் மற்றும் பகுதி அளவிலும் நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்களிடையே விஜய் மக்கள் இயக்கத்தினை கொண்டு சேர்க்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. அதோடு, முன்பெல்லாம் ஒரு படத்தை முழுமையாக முடித்த பின்பு தான், அடுத்த படத்திற்கான பணிகளை விஜய் தொடங்குவார். ஆனால், தற்போது லியோ படத்திற்கான படப்பிடிப்பு முழுமையாக முடிவதற்கு முன்பாகவே, அவரது 68வது படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்காக 200 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றதாகவும் கூறப்படுகிறது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் நேரடியாக களமிறங்க உள்ளதாகவும், அதற்கு தேவையான பணத்தை ஏற்பாடு செய்யவே அடுத்தடுத்து படங்களை விஜய் ஒப்பந்தம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.


மாணவர்களிடம் அடித்தளம்:


இந்த சூழலில் தான், மாணவர்கள் உடனான சந்திப்பு தொடர்பாக விஜய் அறிவித்துள்ளார். தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்கள் 2024ம் ஆண்டு தேர்தலில் இல்லாவிட்டாலும், 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்களிக்க தகுதி பெற்றுவிடுவார்கள். இந்த நிலையில் அவர்களை சந்திப்பதன் மூலம் வருங்கால தலைமுறையினரை ஈர்த்து அவர்களது வாக்குகளை அறுவடை செய்யவே, இந்த சந்திப்பை விஜய் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவருடைய  நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.