ஒரு இசையமைப்பாளராக திரை துறையில் அறிமுகமாகி பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து பின்னர் நடிகராக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஜய் ஆண்டனி. இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றிபெற்ற திரைப்படம் 'பிச்சைக்காரன்'.
விஜய் ஆண்டனியின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த ரசிகர்கள் மத்தியில் தற்போது படப்பிடிப்பில் நடைபெற்ற ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் பயன்பாடு :
'பிச்சைக்காரன் 2' படத்தின் படப்பிடிப்பிற்காக ரிப்பன் பில்லடிங், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அனுமதியின்றி உயர் நீதிமன்ற வளாகம், பார் கவுன்சில் வளாகம் மற்றும் என்.எஸ்.சி போஸ் ரோடு போன்ற தடை செய்யப்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி ட்ரோன் பறக்கவிட்டதை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படக்குழுவினரை விசாரித்து அதை உறுதி படுத்தினர்.
படக்குழுவினர் மூவர் கைது :
தடை செய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் பறக்கவிட்ட படக்குழுவை சேர்ந்த நவீன் குமார், சுரேஷ் மற்றும் ரூபேஷ் ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களின் கேமராவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் எச்சரித்து அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். இதன் காரணமாக உயர் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டு பரபரப்புடன் காணப்பட்டது.
பிச்சைக்காரன் 2 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு :
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் பிச்சைக்காரன் முதல் பாகம். தமிழகத்தில் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள் குறிப்பாக ஆந்திராவில் வசூலை அள்ளிய இப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி,அவரே நடித்து, ஒளிப்பதிவு செய்து இசையமைக்கவும் செய்கிறார். முதல் பாகம் அமோக வரவேற்பு பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது.