காஞ்சி  சங்கர மடத்தின் 68வது பீடாதிபதி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி “பெரியவா” என்னும் தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. 


இதுகுறித்து சங்கரா தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஸ்ரீ சங்கரா டிவி வழியாக கடந்த 14 வருடங்களாக கலாச்சார மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. எங்களது தயாரிப்பில் ஒரு புதிய சீரியல் தொடர் ஒன்றை சேர்க்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். "பெரியவா" என்ற பெயர் கொண்ட இந்த தொடர், காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் 68வது பீடாதிபதி பரமாச்சாரியார் அவர்களது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


சென்னை சேத்துப்பட்டில் உள்ள சங்கராலயம் வளாகத்தில் இந்த தொடரின் தொடக்க விழா  நேற்று முன்தினம் நடைபெற்றது.  இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு  டாக்டர் பத்மா சுப்ரமணியம் தலைமை தாங்கினார். இத்தொடரை இயக்குனர் கே பாலச்சந்தருடன் பணியாற்றிய பாம்பே சாணக்யா இயற்றியுள்ளார். இவர் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகள் இயக்கியுள்ளார். 


காஞ்சி பரமாச்சாரியாரைப் பின்பற்றும் ஒரு குடும்பத்தின் பின்னணியில், நவீன காலத்தில் இந்த குடும்பம் எதிர்கொள்ளும் சவால்கள், மகாபெரியவரின் போதனைகளைப் பின்பற்றும் போது ஏற்படும் சூழ்நிலைகள், என குடும்ப நாடக பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது இத்தொடரின் கதைக்களம். நிகழ்ச்சியில் பேசிய பத்மா சுப்ரமணியம், “எந்த ஒரு கலைஞரும் வெற்றி பெற, கலை கற்று கொடுத்த குரு மற்றும் ஞானம் போதித்த குரு இருவரது பரிபூரண ஆசியும் அவசியம். நான் சேமித்த வெற்றி அனைத்தையும் மஹா பெரியவரின் காலடியில் சமர்ப்பிக்கிறேன் என பேசினார். 


சங்கரா டிவி இயக்குநர் சோனியா ராமதாஸ் பேசுகையில்,  இந்திய நாடு எண்ணற்ற மகான்களின் அருளால் ஆனது. நம் பாரம்பரிய அடையாளங்கள், கலாச்சார அம்சங்கள் அனைத்தும் பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே காலத்தின் கட்டாயம். காஞ்சி மகா பெரியவர் அதற்கான பல எளிய வழிமுறைகளை காட்டியுள்ளார். ஆகவேதான், இந்த பெரியவா தொடரை  எடுக்க முடிவு எடுத்தோம் என்று கூறினார்.


தொடர்ந்து ஆன்மீக பேச்சாளர் திரு கணேஷா சர்மா, "1960 களில் உணவுப் பற்றாக்குறை நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு. "எனக்கு தேவையானது ஒரு பிடி அரிசி" என்று அறிவித்தார் காஞ்சி பரமாச்சாரியார். அவரது கூக்குரலுக்கு செவிசாய்த்து, லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பி "ஒரு பிடி அரிசி" திட்டத்தின் ஒரு பகுதியாக மாறினார்கள்" என்று கூறினார். “பெரியவா” தொடர் ஜனவரி 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.