தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். அப்போது இவர்களிடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு பல்லவி, மேகா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். இவர்கள் சமீபத்தில் கொடுத்த ஒரு நேர்காணலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடப்படும் நாட்டுப்புற பாடல்களை விமர்சித்திருந்தனர்.
புஷ்பவனம் குப்புசாமி பேசுகையில், "டிவி நிகழ்ச்சிகளில், மக்களிசை பாடல்ன்னு சொல்லிட்டு, என்னென்னமோ ஆபாசமா பாடுறான், 'கானாங்கரிசலிலே காடப்புறா ரெண்டு' ன்னு அவன் மனைவி முன்னாடி, நாலு பொண்ணுங்ககிட்ட பாடுறான். பாடிட்டு கைகளால ஆபாசமா சைகை செய்யுறான்." என்று முடிக்க, அனிதா குப்புசாமி தொடர்கிறார். நாங்க பி.ஹெச்டி பண்ணி ரிசர்ச் எல்லாம் பண்ணி இந்த பாடல்களின் நிலையை ஒரு இடத்துல கொண்டு போய் நிறுத்துனா, அப்படியே கீழ கொண்டு வந்துட்டாங்க. பாடவே வேண்டாம் போய்டலாமான்னு இருக்கு. தொடர்ந்த குப்புசாமி, "அவங்களே பாட்டெழுதிக்குறாங்க, 'காட்டுக்குள்ள யாருமில்லை, கலந்துக்கலாம் வாடி புள்ள'ன்னு பாடுறான். நாங்க பாட்றதெல்லாம் இலக்கியங்கள்ல உள்ள வரிகள். அர்த்தங்கள் கூடிய, சரியான வரிகள். ஆண் வரிகள் எப்படி இருக்கும்ன்னா, 'ஒத்தயடி யாருமில்லை, ஒதுங்கலாமா சோலைக்குள்ள'ன்னு பாட, அதுக்கு அவ சொல்றா, 'மன்னு கொடம் உடஞ்சா, மறு கொடத்த வாங்கிடலாம்… பொண்ணு கொடம் உடஞ்சா, பொருந்துமான்னு நீயே சொல்லு! வம்பு வர போகுதையா, வழிய விட்டு தூர நில்லு'ன்னு வரிகள் இருக்கும்" என்று பாடிக்காண்பித்தார்.
அனிதா தொடர்ந்தார், "இதெல்லாம் இலக்கியங்களில், சிலப்பதிகாரத்தில் இருந்தவை, நம் முன்னோர்கள் எழுதினது, இதெல்லாம் தான் உண்மையான ஃபோக் பாடல்கள். டிவி ஷோக்களில் எல்லாம், நல்ல பாடல்கள் மட்டும்தான் பாடனும்ன்னு முடிவெடுத்தோம். ரேட்டிங் வர்றதுக்கு பின்னாடி டான்ஸ் டீம் ஆடினா போதும். நிறைய பேர் பாப்பாங்க. அதுக்கு இடையில நல்ல கருத்துகள் உள்ள பாடல்களை கொண்டு போய் சேர்க்கனும்.
ஆடினாலும் அதுலயும் ஆபாசம் சில நிகழ்ச்சியில. இப்போ ட்ரெண்டையே சுத்தமா மாத்தி, ஒரே சத்தமா பின்னணி இசை கொடுத்து, தேவை இல்லாத வார்த்தைகள் பயன்படுத்தி பாடுறாங்க. நாங்க வச்சுருக்க யூட்யூப் சேனலுக்கு 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் இருக்காங்க. நல்ல பாடலை கொடுத்தா பாக்க மாட்டேன்னு யாரும் சொல்றது இல்ல." என்று அவர் பேசி முடிக்க, குப்புசாமி,"நாமெல்லாம் தோப்பில் உள்ள மரம். நாம செய்யுறது எல்லாம் எல்லாரையும் பாதிக்கும். நாம ஒரே சமூகம். நாம விதைக்குறது நமக்குதான் கிடைக்கும். விஷத்தை விதைச்சா நாளைக்கு அது பாதிக்கப்போறது நம்மளதான்." என்று கூறினார்.