ஹரிஹர வீர மல்லு
பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹரிஹரவீர மல்லு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. க்ரிஷ் ஜகர்லமுடி , ஜோதி கிருஷ்ணா இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளார்கள். பாபி தியோல் , நிதி அகர்வால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். எம்.எம் கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆந்திர துணை முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பு இப்படத்தில் நடிக்க பவன் கல்யாண் ஓப்பந்தம் செய்யப்பட்டார். இதன் பின் அரசியல் பணிகளில் அவர் தீவிரம் காட்டியதால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. 5 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின் வெளியாகியுள்ள இப்படத்திற்கு பவன் கல்யாண் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்துள்ளார்கள்
ஹரிஹர வீர மல்லு விமர்சனம்
17 ஆம் நூற்றாண்டில் முகலாயகர்கள் ஆட்சி செய்த காலத்தில் வீர மல்லு என்கிற வரலாற்று நாயகனை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. "முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் இந்துக்கள் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவதற்காக விதித்த தண்டனை வரியான ஜிஸ்யா வரி, அடக்குமுறையின் அப்பட்டமான அடையாளமாக நிற்கிறது, இருப்பினும் வரலாற்றாசிரியர்கள் நீண்ட காலமாக அதன் மிருகத்தனத்தை மென்மையாக்கியுள்ளனர். இந்த அநீதியை தைரியமாக அம்பலப்படுத்துகிறது, கோஹினூர் திருட்டைப் போல இந்துக்களின் துன்பம் அழிக்கப்படுவதையும் இந்தியாவின் செல்வம் சூறையாடப்படுவதையும் அம்பலப்படுத்துகிறது. அசைக்க முடியாத உறுதியுடன், இந்த சரித்திரம் சனாதன தர்மத்தையும் கொடுங்கோன்மையை மீறிய நமது பாராட்டப்படாத ஹீரோக்களின் தைரியத்தையும் கொண்டாடுகிறது." என பவம் கல்யாண் இப்படத்தைப் பற்றி கூறியுள்ளார்.
பவன் கல்யாண் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினாலும் மற்ற தரப்பு ரசிகர்களிடம் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்துள்ளன. சொதப்பலான திரைக்கதை மிக சுமாரான வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் படத்தின் பெரிய குறைகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இப்படியான நிலையில் ஹரி ஹர வீர மல்லு படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரிஹர வீர மல்லு முதல் நாள் வசூல்
ஹரிஹர வீர மல்லு திரைப்படம் ரூ 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. சாக்னிக் தளத்தின் படி ஹரி ஹர வீர மல்லு முதல் நாளில் முன்பதிவுகளின் வழியாக இந்தியாவில் ரூ20 கோடியும் வெளிநாடுகளில் ரூ 10 கோடியும் வசூல் செய்துள்ளது. மொத்தமாக இப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ 50 கோடியும் பிற நாடுகளில் ரூ 20 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ 70 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படம் இதுவரை முதல் நாளில் ரூ 40.50 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஹரிஹர வீர மல்லு திரைப்படம் இந்த வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதே வசூலை அடுத்தடுத்த நாட்களில் படம் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதுதான் கேள்வி. ஒரு பக்கம் படத்திற்கு மிக சுமாரான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த வசூல் தொடர்வது கொஞ்சம் சவாலானது தான். இப்படத்தின் திரையரங்க விநியோக உரிமை 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரூ 255 கோடிக்கு மேல் படம் வசூல் செய்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு போட்ட பணம் திரும்பி வரும். விடுமுறை நாட்களில் படத்திற்கு என்ன மாதிரியான வரவேர்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
அதுக்குள்ள சக்ஸஸ் மீட்
இதற்கிடையில் படம் வெளியான முதல் நாளே இப்படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டத்தை அறிவித்துள்ளது படக்குழு. இன்று மாலை 4 மணியளவில் ஹைதராபாதில் ஹரி ஹர வீர மல்லு படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது