ஆர்.ஆர்.ஆர். போல சர்வதேச அளவில் பேசப்படும் படங்களை தமிழ் சினிமா தர வேண்டும் என்றால் குறுகிய மனப்பான்மையை விட்டு வெளியே வர வேண்டும் என தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். 


2021ம் ஆண்டு ஓடிடியில் தம்பி ராமையா நடிப்பில் வெளிவந்த படம் ‘வினோதய சித்தம்’. சமுத்திரக்கனி இயக்கிய இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. ‘ப்ரோ’ என பெயரிடப்பட்ட ரீமேக் படத்தை சமுத்திரகனியே இயக்கியுள்ளார். தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா கேரக்டரில் சாய் தேஜும் நடித்துள்ளனர். தெலுங்கு ரசிகர்களுக்காக ஒருசில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள ப்ரோ வரும் நாளை மறுநாள் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 


இதை ஒட்டி ஐதரபாத்தில் படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற நடிகர் பவன் கல்யாண் தமிழ் திரையுலகத்தினரை விமர்சித்துள்ளார். தமிழ் சினிமா கலைஞர்களுக்கு கோரிக்கை வைப்பதாக பேசிய அவர், ”ஒரு பணியை நாங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என நினைக்க கூடாது என்றும், அனைத்து மொழி பேசும் மக்களை ஏற்றுக்கொள்வதால் தான் தெலுங்கு சினிமா செழிப்பாக இருப்பதாகவும்” தெரிவித்தார். உதாரணமாக தமிழகத்தை சேர்ந்த சமுத்திரக்கனி தெலுங்கு படங்களை இயக்குவதாகவும், அதற்கான தெலுங்கு மொழியை கற்றுத்தெரிந்து கொள்வதாகவும் தெரிவித்தார். 






இதேபோல் ஆந்திராவை சேர்ந்த ஏ.எம்.ரத்னம் தமிழ் திரைப்படங்களை இயக்குவதாக குறிப்பிட்ட பவன் கல்யாண், தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும்தான் பணியாற்ற வேண்டும் என்ற புதிய விதியை தான் கேள்வி பட்டதாகவும், தமிழ் சினிமா இத்தகைய குறுகிய மனப்பான்மையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு ரசிகர்கள் எதிர்ப்பையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.  


அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தமிழ் படத்தில் தமிழ் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பவன் கல்யாண் பேசியுள்ளார். 


மேலும் படிக்க: Jailer:”புலிக்கே பசிய தூண்டிப்புட்ட, ரத்த காவு வாங்காம விடுமா” - அதிரடி காட்டும் ஜுஜுபி பாடல் வரிகள் இதுதான்


Jailer Third Single: இதெல்லாம் ‘ஜுஜுபி’...வெளியான ஜெயிலர் படத்தின் 3வது பாடல்...குஷியில் ரசிகர்கள்...!