மஃப்டி' படத்திலிருந்து 90 சதவீதம் 'பத்து தல' திரைப்படம் மாறுபட்டு இருக்கும் என பத்து தல டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கிருஷ்ணா பேசியுள்ளார்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் கிருஷ்ணா இயக்கி, சிம்பு நடிப்பில் வெளியாகும் படம் பத்து தல படத்தின் டீசர் இன்று மால வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. 2017ஆம் ஆண்டு கன்னட சினிமா நடிகர் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற மஃப்டி படத்தின் ரீமேக்காக பத்து தல படம் உருவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மஃப்டி படத்திலிருந்து பத்து தல பெரிதும் மாறுபட்டிருக்கும் என இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
முன்னதாக 'பத்து தல' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் கிருஷ்ணா ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினர்.
அப்போது இயக்குனர் கிருஷ்ணா மேடையில் பேசியபோது;
இந்தப் படம் இரண்டரை ஆண்டு உழைப்பு. ஒரு படம் வெற்றியடைவதைத் தாண்டி அந்தப் படம் எவ்வளவு பெரிய வெற்றியடையும் என்பது தான் பயம். அதை காலம் தான் சொல்ல வேண்டும். இந்தப் படம் ரீமேக் கிடையாது. அந்தப் படத்தில் இருந்து 4 காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது. படம் முழுக்க முழுக்க 90 சதவீதம் வேறு கதை தான். இதுவரை பார்க்காத சிலம்பரசனை புதிதாக இந்தப் படத்தில் பார்ப்பீர்கள்.
படக்காட்சிகள் முழுவதும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே உண்மையாகவே எடுத்திருக்கிறோம். நான் எது கேட்டும் இதுவரை ரஹ்மான் இல்லை என்று சொன்னதில்லை” என்றார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக் மேடையில் பேசியதாவது; இரண்டு வெர்சனாக இந்தப் படம் வந்துள்ளது, 'மஃப்டி' படத்தைப் போல பத்து தல இருக்காது.
சிம்புவுடன் பணியாற்றியது மறக்கமுடியாத அனுபமாக இருந்தது. நான் அவரின் ரசிகன் என்பதால் படத்தில் அவருடன் பணியாற்றியது அருமையாக இருந்தது . சண்டைக்காட்சிகள் அதிகம் இருந்தது அதை ரசித்து பணியாற்றினேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதில் சிம்பு உள்ளிட்ட படக்குழுவினரும், பல சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொள்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
’பத்து தல’ படத்தில் ஏஜிஆர் எனும் டான் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். 'பத்து தல' படத்தின் இசை வெளியீட்டு விழா 18ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏ.ஆர் ரஹ்மானின் இசைக் கச்சேரியோடு பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.