இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் கபிலன், இயக்குநர் கிருஷ்ணா, அமீன் ஆகியோர் இடம்பெற்றுள்ள பத்து தல பட பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு நடித்துள்ள பத்து தல படம் இன்னும் 20 நாள்களில் வெளியாக உள்ள நிலையில் இன்று (மார்ச்.11) இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
பத்து தல:
சிம்புவின் 47ஆவது படமான ‘பத்து தல’ படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ’சில்லுனு ஒரு காதல்’, ’நெடுஞ்சாலை’ படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நான்காவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலான ’நம்ம சத்தம்’ மற்றும் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான முன்னோட்ட வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
ப்ரோமோ:
இந்த வீடியோவில் “படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களான சக்தி - லீலா இருவரும் தங்கள் நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் ஒரு பாடல் வேண்டும்” என இயக்குநர் கிருஷ்ணா கேட்க, அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மெட்டமைப்பது, பாடலாசிரியர் கபிலன் பாடல் வரிகள் எழுதுவது என இந்தப் பாடல் உருவாகும் காட்சி வெளியாகியுள்ளது.
தொடர்ந்து ”இந்தப் பாடலுக்கு இளமையான மற்றும் ஃப்ரெஷ்ஷான குரல் வேண்டும், அமீனைப் பாட வைக்கலாம்” என இயக்குநர் கிருஷ்ணா கேட்க, தன் மகன் அமீனை அழைத்து ”பாடறீங்களா, தமிழில் பாட வேண்டும்...” என குறும்பாக ரஹ்மான் கேட்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
அமீனின் குரலில் ‘நினைவிருக்கா...’ எனத் தொடங்கும் இந்தப் பாடலுக்கான முன்னோட்டமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாளை (மார்ச்.13) மாலை 6 மணிக்கு இந்தப் பாடல் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் 18ஆம் தேதி பத்து தல படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனத் தகவல் வெளியான நிலையில், அதன் பின் இசை வெளியீட்டு விழா குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
2017ஆம் ஆண்டு கன்னட சினிமாவின் பிரபல நடிகரான சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எனினும் இந்தப் படத்தில் 4 காட்சிகள் மட்டுமே மஃப்டி படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், பத்து தல படத்தில் இருந்து இந்தப் படம் பெரிதும் மாறுபட்டிருக்கும் எனவும் இயக்குனர் கிருஷ்ணா ட்ரெய்லர் வெளியீட்டின்போது முன்னதாகத் தெரிவித்திருந்தார். படத்தில் ஏஜிஆர் எனும் டான் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்,.
ஏற்கெனவே டீசர் வெளியீட்டின்போதும், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியீட்டின்போதும் நடிகர் சிம்பு ட்வீட் செய்தது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ”ரஹ்மான் பாயின் சம்பவத்துக்கு அனைவரும் தயாராகுங்கள், அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும்” எனக் குறிப்பிட்டும் ரஹ்மானை தனது காட்ஃபாதர் எனக் குறிப்பிட்டும் சிம்பு பகிர்ந்த ட்வீட் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.