பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவராக உலா வரும் ஷாருக்கான், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஹீரோவாக நடித்துள்ள படம் பதான். இப்படத்தில், ஷாருக்கிற்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். பதானின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் தீபிகா படுகோனே அணிந்திருந்த உடை குறித்தும் அந்த உடையின் நிறம் குறித்தும் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியது.
பதான் சர்ச்சை!
இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் ஆகியோரின் நடிப்பில், சுமார் 250 கோடி ரூபாய் அளவில் உருவாக்கப்பட்டுள்ள படம், பதான். ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான பேஷ்ரம் ரங் பாடல், சமீபத்தில் வெளியானது.
இப்பாடலில் நாயகி தீபிகா படுகோன், காவி நிற கவர்ச்சி உடையணிந்து ஷாருக்கானுடன் நடனமாடுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மற்றும் சபாநாயகர் ஆகியோர் எதிர்த்து கண்டனம் தெரிவித்தனர். “அந்த காவி உடையை நீக்கவில்லை என்றால், பதான் படத்திற்கு மத்திய பிரதேசத்தில் தடை விதிக்கப்படும்” என்றும் அவர்கள் போர் கொடி தூக்கினர்.
நாடாளுமன்றத்தில் பதான் குறித்து பேச்சு:
பதான் படத்தின் பஞ்சாயத்து, பல நாட்களாகவே ஓயாமல் நடைப்பெற்று வரும் நிலையில், இது குறித்து படக்குழுவினர் யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இந்த பிரச்சினை குறித்து, நேற்று (திங்கட்கிழமை) நடைப்பெற்ற நாடாளுமன்ற மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி குன்வர் டேனிஷ் அலி பேசினார்.
அப்போது அவர், “இந்துக்களின் உணர்வுகளை புண் படுத்துவதாக்கூறி, பதான் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று, பாஜக உறுப்பினர் பலர் அதிகாரிகள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பதான் படத்தின் பிரச்சனை ஒரு புதிய வழக்காகவே மாறி விட்டது” என்று கூறினார்.
“இஸ்லாமியர்கள் பலவீனமானவர்கள் அல்ல..”
பதான் பட பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசிய அவர், “சினிமாவிற்கு ஒப்புதல் அளிப்பதையோ, தடை விதிப்பதையோ தணிக்கை குழுவிடம் விட்டுவிட வேண்டும். யாரோ காவி உடை அணிவதால் ஆபத்துக்கு உள்ளாவதற்கு சனாதன தர்மம் பலவீனமானது அல்ல, அது போல் இஸ்லாமிய மதமும் பலவீனமானது அல்ல” என்றார்.
மத்திய பிரதேசத்தில் பதான் படம் வெளியாகுமா?
கடந்த 2 வாரங்களாக தொடரும் பதான் பிரச்சினையால், இப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி, பலரது மனங்களிலும் எழுந்தது. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள், இப்படத்தினை ஒழுங்காக திரையரங்குகளில் திரையிட விடுவார்களா என்றும், மக்கள் பலர் சந்தேகித்து வந்தனர். நாடாமன்ற மக்களவையில், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி குன்வர் டேனிஷ் அலியின் நேற்றைய பேச்சு, அனைவரது சந்தேகங்களுக்கும் பதிலாக அமைந்துள்ளது. இருந்தாலும், படம் வெளியாகும் போதுதான் முழுகதை தெரியும் என ஷாருக் ரசிகர்கள் பலர் சமூக வலைதளம் முழுவதும் தங்களது கருத்துகளை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.