ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பதான்’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான், இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு இந்தியாவில் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் உள்ள ஏராளமான ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரின் பிறந்தநாள் பரிசாக, அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பதான்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஷாருக்கான் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ தமிழில் ‘பதான்’டீசரை கண்டு மகிழுங்கள். அடுத்த வருடம் (2023) ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்தை , உங்களுக்கு அருகிலுள்ள பெரிய ஸ்கீரினில் மட்டுமே பார்த்துகொண்டாடுங்கள். ‘பதான்’ திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது” என்று பதிவிட்டு இருக்கிறார்.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி இருக்கும் இப்படத்தில், ஷாருக்கான் ஜோடியாக நடித்துள்ளார் தீபிகா படுகோன் நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் அறிமுகமான தீபிகா, அதன் பின்னர் ஷாருக்குடன் ‘ஹேப்பி நியூ இயர்’ ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்த வரிசையில் இந்தப்படத்தின் நடித்ததின் மூலமாக, 4 ஆவது முறையாக ஷாருக்கானுடன் அவர் இணைந்திருக்கிறார்.
ஜவான்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லீ, முதன்முறையாக பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை இயக்கியுள்ள திரைப்படம் "ஜவான்". இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ஷாருக்கான், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். இந்தப்படத்தில் நடிகர் விஜயும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியானது.
முன்னதாக இந்தப்படத்தில் இருந்து, மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இந்தப்படம் குறித்த புதிய அப்டேட் ஏதாவது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் நிலவி வருகிறது.