பாலிவுட்டில் இன்னும் மிச்சம் மீதி சாதனைகள் எங்கே இருக்கு எனக்கேட்டு அனைத்தையும் அடித்து நொறுக்கி பதான் படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.


1000 கோடி வசூல், 110 ரூபாய் டிக்கெட்


பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமும் பாலிவுட் பாட்ஷாவாகக் கொண்டாடப்படுபவருமான ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பதான்,  ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது.


காவி நீச்சல் உடை தொடங்கி பதான் படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி எதிர்ப்புகள் வலுத்த நிலையில், இவற்றையெல்லாம் கடந்த ஒரு வழியாக வெளியான பதான் படம், இந்தியில் இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படமாக மாறியுள்ளது.


மேலும், மூழ்கிக் கொண்டிருந்த பாலிவுட் சினிமாவுக்கு பெரும் வெற்றியைப் பெற்று தந்ததுடன், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானுக்கும் சூப்பர் ஹிட் படமாக அமைந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.


தயாரிப்பு நிறுவனம் அதிரடி ஆஃபர்


அந்த வகையில் நேற்றுடன் பதான் படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூலையும், இந்தி பதிப்பில் மட்டும் 500 கோடி ரூபாய் வசூலையும் கடந்து மகத்தான சாதனையை புரிந்துள்ளது.


இந்நிலையில் இந்த சாதனைகளுக்கு இணங்க நாடு முழுவதும் உள்ள ஷாருக்கான் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் பதான் படக்குழுவினரும் தொடர்ந்து பல விஷயங்களை முன்னெடுத்து வருகின்றனர். 


அந்த வகையில் இந்தியா முழுவதும் பிவிஆர் சினிமாஸ், ஐநாக்ஸ், இந்தியா சினிபோலிஸ் உள்ளிட்ட அரங்குகளில் வெள்ளிக்கிழமையான இன்று (பிப்.24) மட்டும் பதான் படத்தின் டிக்கெட்டின் விலை 110 ரூபாய் எனும் கவர்ச்சிகர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து முன்னதாக பதான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.


 






இந்நிலையில், ஏற்கெனவே பதான் படத்தின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடி வரும் ஷாருக்கான் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் உற்சாகமாக இந்த அறிவிப்பைக் கொண்டாடி வருகின்றனர் . இந்தியாவில் மட்டும் ஒரு வார காலத்துக்குள் 600 கோடி வசூலை பதான் எட்டும் என ஆரூடம் சொல்கின்றனர் திரைப்பட விமர்சகர்கள்.


இயக்குநர் நெகிழ்ச்சி


முன்னதாக பதான் படத்தின் வரலாற்று சாதனை குறித்து மனம் திறந்த இயக்குநர் சித்தார்த் ஆனந்த் பேசியதாவது  "உலகளவில் பதான் மக்களை மகிழ்வித்து வருவதில் நான் உற்சாகமாக இருக்கிறேன். உலக அளவில் 1000 கோடி வசூலையும், ஹிந்தி பதிப்பில் 500 கோடி வசூலையும் பதான் எட்டியது வரலாற்று சிறப்புமிக்கது. 


பதான் மீது மக்கள் பொழிந்துள்ள அன்புக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்..  ஒரு இயக்குனராக, உலக அளவில் பலருக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு படத்தை உருவாக்கியதற்காக நான் பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை.


இந்த நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டு பதானைத் தயாரிக்கத் தொடங்கியபோது, ​​நாங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையை துரத்துகிறோம் என்று எனக்குத் தெரியும்.


ஆனால் 400 கோடியைத் தொடும் முதல் இந்திப் படமாக பதான் மாறும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்தியாவில் இப்போது 500 கோடிகளை ஈட்டியுள்ளது. இது நம்பமுடியாத சாதனை.  இந்த வெற்றி என்னையும் YRF மற்றும் குழுவில் உள்ள அனைவரையும் சிறப்பாக வேலை செய்ய ஊக்குவிக்கிறது. 


இது ஒரு அரிய சாதனை என்பதால் ஒட்டுமொத்த இந்தித் திரையுலகமும் இந்த வெற்றியை ரசித்து கொண்டாட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.