பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் 'பதான்' படத்தின் இரண்டாவது பாடலான 'ஜூம் ஜோ பதான்’ பாடல் டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே வெளியான தகவலின் படி இன்று இப்பாடல் வெளியாகியுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய பதான் பாடல் :
பாலிவுட் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனரான சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பதான். ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு ’பதான்’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் முதல் பாடலான 'பேஷரம் ரங்' பாடல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் பல சர்ச்சைகளை சந்தித்து கிளப்பி வருகிறது;
இந்த பாடல் முழுவதும் தீபிகா படுகோன் காவி நிறத்திலான பிகினி உடை அணிந்திருப்பதற்கு பெரும் கண்டனம் எழுந்துள்ளது. வலதுசாரி அமைப்புகள், அரசியல்வாதிகள், இந்துத்துவ கும்பல் என பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருவதுடன் உருவப்படங்களை எரிப்பது, திரையிட கூடாது என மிரட்டல் விடுவதுமாக ஒருபுறம் இருக்க மறுபுறம் ஷாருக்கான் மற்றும் தீபிகாவிற்கு பல அந்தஸ்துகளை கொடுத்து கௌரவித்து வருகிறார்கள்.
வெளியானது இரண்டாவது பாடல் :
சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும் அதை பற்றி எல்லாம் சிறிதும் செவி சாய்க்காமல் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளனர் பதான் படக்குழுவினர்; ஆம், விஷால் - சேகர் இணைந்து இசையமைத்துள்ள பதான் படத்தின் 'பேஷரம் ரங்' பாடல் வெளியானதை தொடர்ந்து பதான் படத்தின் இரண்டாவது பாடலான ‘ஜூம் ஜோ பதான்’ பாடல் வெளியாகியுள்ளது. தமிழில்இப்பாடலை அர்ஜித் சிங், சுக்ரிதி மற்றும் குமார் இந்த பாடலை பாடியுள்ளார்கள். வெளியான சில மணி நேரங்களிலேயே ஏராளமான வியூஸ் பெற்று பட்டையை கிளப்பி வருகிறது இந்த பாடல்.