பாலிவுட்டில் பலகட்ட பிரச்னைகளைத் தாண்டி ஜனவரி 25-ஆம் தேதி வெளியான ஷாருக்கின் பதான் படம் இந்திய சினிமா வரலாற்றில் பல பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்ட்களை அடித்து நொறுக்கி சாதனை புரிந்து வருகிறது.
அந்த வகையில் வெளியான ஐந்தே நாள்களில் உலகம் முழுவதும் மொத்தம் 543 கோடி ரூபாய் வசூலித்து ஒட்டுமொத்த பாலிவுட் உலகையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது பதான். இந்தியாவில் மட்டும் மொத்தம் பதான் படம் 335 கோடி வசூலித்துள்ள நிலையில், ஷாருக்கான் தான் பாலிவுட்டின் வசூல் மன்னன் என்பதை அழுத்தமாக இப்படத்தின் மூலம் வசூலித்துள்ளார் எனக் கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவும் கடந்த 2 ஆண்டுகளாக இறங்குமுகத்தில் பயணித்த நிலையில், பாலிவுட்டின் பாட்ஷாவாகக் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கானால் தான் பாலிவுட் மீண்டெழும் என பலரும் ஆரூடம் தெரிவித்து வந்தனர்.
2018ஆம் ஆண்டு வெளியான ’ஜீரோ’ படத்தின் வணிக ரீதியான தோல்வி ஏற்படுத்திய பாதிப்பில், இருந்த ஷாருக்கான் சிறிது காலம் இடைவெளி எடுத்து படங்களை பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வந்தார்.
இதனிடையே 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கத்தில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஷாருக்கின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நடிகர் ஷாருக்கானை பெரும் மன உளைச்சலில் இச்சம்பவம் தள்ளிய நிலையில், ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் அவருக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் திரண்டன.
தொடர்ந்து மும்பை சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான், 2022ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, லால் சிங் சத்தா, பிரம்மாஸ்திரா படங்களில் கேமியோ கதாபாத்திரங்களில் தோன்றியதுடன், பதான் படத்தைத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார் ஷாருக்.
ஆனால் அனைத்து பாலிவுட் படங்களுக்கும் சமீபகாலமாக எழும் பாய்காட் பாலிவுட் பிரச்சினை இந்தப் படத்துக்கும் தலைத்தூக்கிய நிலையில், இப்படத்தின் பாடலில் தீபிகாவின் காவி நிற உடை எதிர்ப்புக்களை சம்பாதித்து இந்து அமைப்புகளின் கடும் கோபத்துக்கு ஆளாகி புயலைக் கிளப்பியது.
இவற்றையெல்லாம் கடந்து ஒரு வழியாக ஜன.25 வெளியான பதான் படம் ஷாருக்கானுக்கு சிறப்பான கம் பேக் படமாக அமைந்து ஐந்தே நாள்களில் உலகம் முழுவதும் 543 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.