பருத்திவீரன்


அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் (Paruthiveeran) திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன.




கடந்த 2007ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான படம் பருத்திவீரன். கார்த்தி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பிரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் ஆகியோஎ இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். பருத்தி வீரன் படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன.


நிலம் சார்ந்த மனிதர்கள்


இன்று மலையாளப் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கின்றன. இந்தப் படங்கள் ஏதோ ஒரு வகையில் நிலத்தையும் மனிதர்களையும் தொடர்புபடுத்துகின்றன. இப்படியான படங்கள் இன்று தமிழ் சினிமாவில் வெளியாவது கொஞ்சம் குறைவுதான். பருத்திவீரன் அப்படியான ஒரு படம். நிலத்தையும்  கதாபாத்திரங்களையும் பிரித்துப் பார்க்க முடியாத வகையில் இப்படம் தொடர்புபடுத்தியது. 




கதையாக பார்க்கையில் இரு குடும்பங்களுக்கு இடையில் நிலவும் பகை மற்றும் இந்த குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காதலிக்கிறார்கள். பருத்திவீரன் படத்தை சுவாரஸ்யமானதாக மாற்றியது கதையை விட அதை சொன்ன விதமே! ஒரு கிராமத்தில் வாழும் மக்கள். அவர்களின் அன்றாடங்களை யதார்த்தமான நிகழ்வுகளை காட்சிபடுத்தியதே படத்தின் மிகப்பெரிய பலம்.


முத்தழகு - வீரன்


பாரதிராஜா காட்டிய கிராமங்களுக்குப் பிறகு பருத்திவீரன் படம் காட்டிய கிராமத்து கதாநாயகன்  - நாயகி இன்னும் ஒரு படி மேலே இருந்தார்கள். அடிதடியைத் தவிர ஹீரோவுக்கான எந்த குணாதிசயமும் கார்த்தியிடம் இருக்காது.  அதே நேரத்தில் ஒரே நேரத்தில் அதீத அன்பு கொண்டவராகவும் அதீத தைரியம் கொண்ட ஒருவராகவும்  பிரியாமணியின் கதாபாத்திரம் அமைந்திருக்கும்.




வெளிநாட்டில் தன் சினிமா சார்ந்த படிப்பை முடித்து வந்து உதவி இயக்குநராகப் பணியாற்றி நவீன யுகத்து இளைஞராக வலம் வந்த நடிகர் கார்த்தியை, அவரது முதல் படத்தில் வீரன் கதாபாத்திரமாகவே மாற்றியதில் இயக்குநர் அமீருக்கு பெரும் பங்கு இருக்கிறது. மேலும் சித்தப்பு சரவணன், முத்தழகின் அம்மா சுஜாதா, பொன்வண்ணன், சம்பத், கஞ்சா கருப்பு என ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவம்.


இவர்களுடன், படத்தின் காட்சி மொழியுடன் ஒன்றி மற்றுமொரு கதாபாத்திரமாகத் திகழ்ந்து கூடுதல் பலம் சேர்த்தது யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. பின்னணி இசை, பாடல்கள் என மண் சார்ந்த தனித்துவமான இசையைக் கொடுத்த யுவனின் பருத்திவீரன் ஆல்பம் அவரது கரியரின் உச்சம்!


அமீர் Vs ஞானவேல் ராஜா


சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குநர் அமீரின் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தார். அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியவை அனைத்தும் திரிக்கப்பட்டவை என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.




குறிப்பாக நடிகர் மற்றும் இயக்குநர்களான சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டவர்கள் பருத்திவீரன் படத்தின்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படப்பிடிப்பின் பாதியில் கைவிட்டுவிட்டதாகவும் தங்களது நண்பர்கள் பலரிடம் இருந்து பணம் கடன் வாங்கியே அமீர் இந்தப் படத்தை வெளியிட்டதாகவும் அவருக்கு ஆதரவுக் குரல்கள் வலுத்தன. சில வாரங்கள் வரை இந்தப் பிரச்னை நீள, சென்ற நவம்பர் மாதம் இறுதியில் தன் பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞான வேல் ராஜா வருத்தம் தெரிவித்தார்.


பருத்திவீரன் படத்தினைச் சுற்றி இப்படி 17 ஆண்டு கால பிரச்னைகள் சுழன்று வந்தாலும், தமிழ் சினிமாவுக்கு பருத்திவீரன் எனும் சிறந்த படைப்பைத் தந்த அமீர் தமிழ் சினிமாவில் காலம் கடந்து என்றென்றும் கொண்டாடப்படுவார்.