நடிகர் விஜய்யின் பிரபல ஹிட் படத்தை தான் தான் முதலில் இயக்கவிருந்ததாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.


ஜூலை 15 வெளியாகும் இரவின் நிழல்


ஆசியாவின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக உருவாகியுள்ள பார்த்திபனின் ’இரவின் நிழல்’ படம், நாளை மறுநாள் ஜூலை 15ஆம் தேதி வெளியாக உள்ளது.


இப்படத்துக்கான ப்ர்மோஷன் பணிகளில் நடிகர் பார்த்திபன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் முன்னதாக தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் விஜய்யை இயக்குவது குறித்த சுவாரஸ்யத் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார் பார்த்திபன்.


விஜய் இயக்க சொன்ன அந்தப் படம்...


”விஜய் நடிகரானதே மிகப்பெரிய ஸ்க்ரீன்ப்ளே. விஜய்க்கு ஏதாவது சின்ன ரோல் கொடுங்க என அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் என் வீட்டு பார்ட்டிகளில் எல்லாம் கேட்பார். விஜயகாந்த் படங்களில் விஜய் அப்படித்தான் அறிமுகமானார். ஆனால், அந்த நிலைமை எல்லாம் எப்போவோ மாறி இன்றைக்கு விஜய் ஒரு டிசைடிங் ஃபேக்டராக தமிழ் சினிமாவில் உச்சத்தில் வளர்ந்து நிற்கிறார்.


'3 இடியட்ஸ்’ படத்தை தமிழில் பண்ணப் போறேன். அந்த படத்தை, நீங்க இயக்கிக் கொடுங்க என நடிகர் விஜய் முதலில் என்னை தான் அணுகினார். ஆனால், அந்த சமயத்தில் என்னால் அந்தப் படத்தை இயக்க முடியாமல் போய் விட்டது. இயக்குநர் ஷங்கர் அதை அவ்வளவு கலர்ஃபுல்லாக இயக்கியதை பார்த்த பின்பு இந்த அளவுக்கு நான் இந்த படத்தை பண்ணியிருக்க மாட்டேன் என உணர்ந்தேன்.


’வித்தியாசமாகக் காட்டுவேன்’


விஜய்யை இயக்க எனக்கு ரொம்பவே ஆசை தான். ஆனால், இப்போது இருக்கும் நிலைமையில், விஜய், தனுஷ் உள்ளிட்டவர்கள் அவர்களாகத்தான் இயக்குநர்களை தேர்வு செய்யும் இடத்தில் உள்ளனர். அப்படி ”பார்த்திபன் வாங்க ஒரு படம் பண்ணலாம்” என அழைத்தால், அப்பவும் வித்தியாசமான படங்களில் அவர்களை எப்படி காட்டலாம் என்று தான் நினைப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.


நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்த ’செருப்பு சைஸ் 7’ வெளியாகி விமர்சன ரீதியில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்தது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை பார்த்திபனே தயாரித்து இயக்கியிருந்தார்.


கவனம் ஈர்த்துள்ள இரவின் நிழல்




இந்தப் படம் இரு தேசிய விருதுகளை வென்றது. இப்படத்தினைத் தொடர்ந்து தற்போது இரவின் நிழல் படத்தை இயக்கியுள்ளார் பார்த்திபன். முன்னதாக இப்படத்தைப் பார்த்த ஊடகவியலாளர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் படத்தை உச்சிமுகர்ந்து பாராட்டி வருகின்றனர். இப்படத்துக்கும், ஒளிப்பதிவாளர் ஆர்தர் A வில்சனுக்கும் ஏற்கெனவே சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில், வரலட்சுமி சரத்குமார், பிரிஜிடா சாகா, ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்த்திபனுடன் இணைந்து நடித்துள்ளனர்.