பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன், இயக்குனர் மணிரத்னத்திடம் இருந்து கிடைத்த பாராட்டை ஒரு பொக்கிஷமாக கருதி அதை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த சரித்திர காவிய திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சிறுசு என்றாலும் மவுஸான கதாபாத்திரம்:
இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் சின்ன பழுவேட்டரையர் எனும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அது புத்தகத்தில் ஒரு புக் மார்க் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரம் என்று ஏற்கனவே நடிகர் பார்த்திபன் PS1 படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய போது தெரிவித்தார்.
தஞ்சையில் பார்த்திபன் :
இன்று பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் வெளியாகியுள்ளது. சோழர்களின் தலைநகரமாக கருதப்படும் தஞ்சாவூரில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகராக அமர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை கண்டுகளித்துள்ளார் சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன். படத்தை பார்க்க வந்ததை விட பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு எவ்வாறு உள்ளது என்பதை காண சென்றாக தெரிவித்துள்ளார். இந்த செய்தியினை இயக்குனர் மணிரத்னத்திடம் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் மூலம் பகிர்ந்துள்ளார் பார்த்திபன்.
பாராட்டி தள்ளிய மணிரத்னம்:
பார்த்திபனின் அந்த வாய்ஸ் மெஸேஜிற்கு இயக்குனர் மணிரத்னம் பதில் அளித்துள்ளார். "நன்றி பார்த்திபன் சார். இந்த படத்தின் ஒரு அங்கமாக இருந்ததற்கு நன்றி. சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்ததற்கு நன்றி. உங்களின் வேலையின் நடுவே நேரம் ஒதுக்கி தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டதற்கு நன்றி. மேலும் இன்று தஞ்சாவூர் சென்றதற்கு மிக்க நன்றி..." என நடிகர் பார்த்திபனை பாராட்டி தள்ளியுள்ளார். இந்த பதிவை பகிர்ந்த பார்த்திபன் அதனுடன் 2 வார்த்தைகள் பேசவே 98 % GST வரி போடும் மனிதரிடமிருந்து 5.2 வரிகள் பாராட்டு - பாரே சீழ்க்கை அடிப்பது போல் உள்ளது என்ற குறிப்புடன் இதை பகிர்ந்துள்ளார் பார்த்திபன்.