தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த கலைஞர்களில் ஒருவர் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். தனது தனித்துவமிக்க படைப்புகளால் ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்த நடிகர் பார்த்திபன் கடந்த 2022ம் ஆண்டு எழுதி, இயக்கி, நடித்த திரைப்படம் 'இரவின் நிழல்'.
நான் லீனியர் சிங்கிள் ஷாட் :
ப்ரிகிடா, ரேகா நாயர், வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ருத், ரோபோ சங்கர் நடிப்பில் உருவான இப்படம் உலக அளவில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்ற பெருமையை பெற்றது. சாதாரண படங்களை இயக்கவே ஏகப்பட்ட உழைப்பு தேவைப்படும் போது, இது போன்ற ஒரு படங்களை இயக்கி அதை வெற்றிப் படமாகவும் கொடுத்த பார்த்திபன் பாராட்டிற்குரியவர்.
தேசிய விருது :
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்புடன் உருவான இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஏராளமான விருதுகளைக் குவித்த இப்படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா... ’ என்ற பாடலுக்கு ஸ்ரேஷா கோஷலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தாக பார்த்திபன் மீண்டும் படம் இயக்க உள்ளார். இப்படத்துக்கு இசையமைப்பதற்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை அணுகியுள்ளார் பார்த்திபன். ஆனால் ஏ.ஆர்.ஆர் அதிக வேலைப்பளு காரணமாக பார்த்திபன் இயக்கும் புதுப் படத்துக்கு இசையமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
டி. இமானுடன் கூட்டணி :
இந்நிலையில் பார்த்திபன் அடுத்ததாக இசையமைப்பாளர் டி.இமானை அணுகியுள்ளார். அவர் பார்த்திபன் படத்திற்கு இசையமைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். டி. இமானை தனது படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளதை அழகான பதிவாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் பார்த்திபன்.
“வாவென வாய்பிளந்து வரவேற்று வாய் நனைய முத்தமிட்டு இறுதிவரை இருக்க விரும்பி இறுக அணைத்தாலும், திட்டமிட்டபடி சட்டென விட்டு விலகி சென்றுவிடும் சென்ற வினாடிகள்! தும்பைப் பூவின் மீது தூய்மையான பனித்துளி படர்ந்து தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட மெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும் பூப்பதுமுண்டு!
இசையை விட தூய்மையானது எது? சென்ற படத்தில் ரகுமானுடன் இணைந்த நான் வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன். இம்மான்.. இமான்! அபார ஞானமும் அயராத உழைப்புமாய் அடுத்தடுத்த மணிகளில் மனிதர் 5 பாடல்களை பிரசவித்தார். இன்னும் இரண்டு கர்ப்பத்தில் ‘மைனா’வின் குரல் போல் இவரின் இசையும் இனிமை. அன்றிலிருந்து அவரின் இசையும் ஒரு அன்றில் பறவையாய் என் ரசனை வானில் பறந்துக் கொண்டிருந்தது. இனி… இனிமை இசையாய்… ஓகே டைட்டில்? அறிவிப்போம் விரைவில்!” என வர்த்திகளால் ஜாலம் செய்து பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.
பார்த்திபன் திரைப்படங்கள் என்றுமே வழக்கமான திரைப்படங்களை காட்டிலும் சற்று வித்தியாசமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் அவரின் படங்களுக்காக ஆவலுடன் காத்திருப்பார்கள்.