மிக்ஜாம் புயல்
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி சென்னையை நெருங்கிய மிக்ஜாம் புயல் மிகப்பெரிய பொருட்சேதங்களை ஏற்படுத்தியதோடு மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டும் பலத்த காற்றினால் ஏற்பட்ட சேதங்களோடும் காணப்படுகின்றன.
சென்னையில் சூளைமேடு, கோடம்பாக்கம், பெருங்குடி, ராயப்பேட்டை, ஊரப்பாக்கம், துறைமுகம், எண்ணூர், வியாசர்பாடி, சைதாபேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. சில பகுதிகளில் நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கியிருந்தாலும் இன்னும் பல இடங்களில் மக்கள் வெள்ள நீர் காரணமாக அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் தத்தளித்து வருகிறார்.
மீட்பு பணிகள்
ஒரு பக்கம் அரசின் மீட்பு குழுவினர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டுச் சென்றும் அவர்களுக்கு உணவு வழங்கியும் வருகையில் மறுபக்கம் தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவி வருகிறார்கள். தமிழ் சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் சிலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
2 லட்சம் நிதி அளித்த பார்க்கிங் படக்குழுவினர்
அந்த வகையில் சமீபத்தில் வெளியான பார்க்கிங் படக்குழுவினர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 2 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளனர். ஹரிஷ் கல்யண், எம் எஸ் பாஸ்கரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் தகவலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் பகிர்ந்துள்ளார்.
மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நாடு படக்குழுவினர்
பார்க்கிங் படக்குழுவினரைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான நாடு படக்குழுவினரும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை நேரடியாக சென்று வழங்கி வருகிறார்கள். எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி உள்ளிட்ட படங்களை இயக்கிய எம் சரவணன் இந்தப் படத்தை இயக்கி, தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள நாடு திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்ற போதிலும் போதுமான கூட்டம் இல்லாத காரணத்தினால் ஒரு சில திரையரங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதி மக்களுக்கு நாடு திரைப்படத்தின் இயக்குனர் சரவணன் மற்றும் நாயகன் தர்ஷன் ஆகியோர் நேரில் சென்று உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளனர்.