நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் மாற்று சமூக பெண்ணை காதலித்ததால் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைத்தொடர்ந்து பெண்ணின் தந்தையும், காவல் ஆய்வாளரான சரவணன் கைது செய்யப்பட்டார். ஆனால் இதுவரை பெண்ணின் தாயார் பெயரில் எப்ஐஆர் இருந்தும் கைது செய்யப்படவில்லை. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பிரபல யூடியூபர்ஸ் கோபி -சுதாகர் பரிதாபங்கள் நிகழ்ச்சியில் ஆணவக்கொலையை வன்மையாக கண்டித்து வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

பரிதாபங்கள் கோபி - சுதாகர்

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் கோபி - சுதாகர் இருவரும் இணைந்து செய்யும் வீடியோ கன்டென்ட் பரவலாக அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துவிடும். குறிப்பாக பெண் தானே சாப்ட் ஆ இருப்பா என்று நினைக்க வேண்டாம், எங்கேடா போறீங்க எல்லாரும் போன்ற வசனங்கள் இப்போதும் மீம்ஸ்களாக வந்து இணையத்தை கலக்குகிறது. அதேபோன்று நேரத்திற்கு ஏற்றார் போல் ஆடி பாவங்கள், மாமியார் பாவங்கள், மருமகள் பாவங்கள் பாேன்றவை அவ்வப்போது வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே காமெடியாக எதார்த்தமான பேச்சுக்களால் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

கல்விதான் முக்கியம்

அந்த வகையில், தங்களது பரிதாபங்கள் யூடியூப் சேனலில் Society Paavangal என்ற பெயரில் புதிய வீடியோ ஒன்றை நேற்று பதிவேற்றம் செய்துள்ளனர். இதில், தமிழகத்தில் நடக்கும் அவலங்களை கோபி மற்றும் சுதாகர் டீம் தோலுரித்து காட்டியுள்ளனர். குறிப்பாக மறைந்த போராட்ட தியாகிகளின் நினைவு தினத்தில் அந்தந்த சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் செய்யும் அலப்பறையை அரசியல் சட்டையர் வகுப்பு எடுத்துள்ளனர். கார் மற்றும் பைக்கில் செய்யும் அட்ராசிட்டிகளை எல்லாம் சகிக்க முடியாத பொதுமக்களின் கருத்தை அந்த வீடியோவில் கோபியும் சுதாகரும் பேசியிருப்பதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். குறிப்பாக படிங்கடா படித்து பெரிய ஆளாக வரவேண்டும் அதுதான் வளர்ச்சி என்றும் ஒரு சமூகத்திற்கு கல்வி முக்கியம் என்பதையும் அறிவுறுத்தியுள்ளனர். 

ஆணவக்கொலையை கண்டித்து வீடியோ

அதே நேரத்தில் நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் சம்பவம் தொடர்பாகவும் Society Paavangal வீடியோ மூலம் சாதியை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர். அந்த வீடியோவில் அக்காவை காதலிக்கும் பையனை கொலை செய்ய தூண்டும் விதமாக சாதியவாதி பேசுவது போன்று சித்தரித்துள்ளனர். அதற்கு கோபி கவுன்டர் கொடுத்து உலகம் சின்னது கிடையாது ரொம்ப பெரிசு, இன்னும் அதுக்குள்ளே சுத்திக்கிட்டு இருக்காதீங்கடா என்று கூறுகிறார். சாதியால் இளைஞர்கள் வாழ்க்கை சீரழிகிறது, கொலை செய்பவரின் வாழ்க்கையும் போச்சு, இறந்தவரின் வாழ்க்கையும் போச்சு போன்று கோபி பேசுகிறார். பின்னர் மிளகாய் பொடி தூவி முதுகுல குத்துறது வீரம் கிடையாது. நீங்கலாம் நல்லாவே இருக்க மாட்டீங்க என்பது போன்றும் கோபியும் சுதாகரும் பேசியுள்ளனர். 

பார்வையாளர்கள் வரவேற்பு

தற்போது ஆணவக்கொலைக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பேசத் தயங்கும் இந்த நேரத்தில் கோபி, சுதாகரின் கட்ஸை பாராட்டுகிறோம் என பார்வையாளர்கள் கமெண்டில் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கோபி - சுதாகர் டீமை மனதார பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சாதியை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்லாமல் சாதியவாதிகளுக்கும் தக்க பாடம் புகட்டியிருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.