சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தயாரிப்பு நிறுவனம் bots-ஐ பயன்படுத்தி அதிக வியூஸ்களை பெற்றுள்ளதாக நெட்டிசன்ஸ் குற்றம் சாட்டியுள்ளனர்
பராசக்தி
இயக்குனர் சுதா கொங்கரா சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலிலா ஆகியோரை வைத்து பராசக்தி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் எடுத்துள்ளது. இந்த படமானது ஆரம்பத்தில் ஜனவரி 14 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வணிக காரணங்களுக்காக ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
SK-25
இந்த படமானது சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பதால் பயங்கர எதிர்ப்பார்ப்பு எழுந்து இருந்தது, மேலும் படத்தின் கதைக்களமும் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகி உள்ளதால் தமிழ்நாட்டில் நடந்த பல அரசியல் நிகழ்வுகளின் வரலாறு இடம்பெறலாம் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
மிரட்டிய ட்ரெய்லர்:
நேற்று பராசக்தி படத்தின் ட்ரெய்லர் வெளியானது, எதிர்பார்த்தது போலவே ட்ரெய்லரும் சிவாகார்த்திகேயன் ரசிகர்களை மட்டும் ஈர்க்காமல் அனைத்து தரப்பினரையும் பெரிதும் கவர்ந்தது. மேலும் ட்ரெய்லர் வியூஸ்களிலும் சாதனை படைத்தது. ட்ரெய்லர் வெளியான 12 மணி நேரத்தில் 25 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்தது. அதே போல் அஜித் நடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லரை 24 மணி நேரத்தில் 24 மில்லியன் பேர் மட்டுமே பார்த்திருந்தனர்.
கிளம்பிய சர்ச்சை:
ட்ரெய்லரை 25 மில்லியன் பேர் பார்த்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஆனால் வெறும் 3 லட்சம் லைக்குகள் மட்டுமே வந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் . மேலும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் 'பாட்' (Bot) மென்பொருள்களைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் இந்த வியூஸ்களை (Views) அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' பட ட்ரெய்லரே 24 மணி நேரத்தில் 14.2 மில்லியன் பார்வைகளைத்தான் பெற்றது. இப்படியிருக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'பராசக்தி' ட்ரெய்லர் அதைவிடப் பலமடங்கு அதிகமான சாதனையைப் படைத்திருப்பதை ஏற்க முடியாது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.