அடுத்தடுத்த படங்களை வெளியிடும் விக்ரம்


பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த பிறகு, அடுத்தடுத்த பெரிய படங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார் நடிகர் விக்ரம். இதில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் திரைப்படத்தின் மீது தான் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனம் குவிந்துள்ளது. இப்படத்தில், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜூன் பிரபாகரன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து  தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்க ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் கிஷோர் குமார்.


தங்கலான் ரிலீஸ்


கோலார் தங்க வயல் சுரங்கத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த அசத்தலான கிளாசிக் பீரியாடிக் திரைப்படம். தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவே இதுவரையில் காணாத ஒரு வரலாற்று படமாக "தங்கலான்" அமையும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


சில மாதங்களுக்கு முன்பாக தங்கலான் படத்தைப் பற்றிய ஒரு சிறு முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை மிரள வைத்தது. காட்சி அனுபவமாக ஒரு சிறந்த படமாக தங்கலான் படம் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். மேலும் தங்கலான் படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்புவதில் படக்குழு மிக உறுதியாக இருக்கிறது.






சமீபத்தில் தங்கலான் படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தகவலின் படி அடுத்த ஆண்டு ஜனவர் 26 ஆம் தேதி தங்கலான் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தங்கலான் படத்தின் டீசர் வரும் நவம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தங்கலான் படத்தின் டீசர் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் ஒரு புறமிருக்க பழங்குடி இனத்தைச் சேர்ந்த விக்ரம் மறுபக்கம் கம்பீரமாக நிற்கிறார்.


துருவநட்சத்திரம்


கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இதனைத் தொடர்ந்து சு அருண் குமார் இயக்கும் சியான் 62 படத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம்.