திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரின் வாரிசுகள் சினிமாவில் அடியெடுத்து வைத்தாலும் அதில் ஒரு சிலரால் மட்டுமே வெற்றியை எட்டமுடிகிறது. பெரும்பாலான வாரிசு நடிகர்களால் பெரிய அளவில் ஜெயிக்க முடியாமல் போனதுண்டு. அப்படி ஒரு வாரிசுதான் பிரபலமான இயக்குநர் பி. வாசுவின் மகன் சக்தி. அவரின் 41வது பிறந்தநாள் இன்று.
குழந்தை நட்சத்திரமாக நடிகன், சின்ன தம்பி, ரிக்சாமாமா, செந்தமிழ் பாட்டு, இது நம்ம பூமி போன்ற பல படங்களில் நடித்த சக்தி ஹீரோவாக முதலில் அறிமுகமான திரைப்படம் 'தொட்டால் பூ மலரும்'. அப்படத்தில் இடம்பெற்ற 'அரபு நாடே அசந்து போகும்...' பாடல் இன்று வரை மிகவும் பிரபலமான ஒரு பாடல். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அப்படத்தில் சக்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதை தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மிகவும் திறமையான நடிகர் ஆனால் அவரால் ஏனோ பெரிய அளவில் நிரூபிக்க முடியாமல் போனது.
இதற்கு இடையில் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கினார். அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதே ஒரு அழுத்தத்தின் காரணமாகத்தான். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள், அடுத்தடுத்து அவருக்கு விழுந்த அடி, லைப் ஸ்டைல் மாற்றம், தப்பான நட்பு சகவாசம் இப்படி பல நெகட்டிவ் விஷயங்கள் அனைத்தும் அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாற்றியது.
ஒரு பிரபலமான இயக்குநரின் மகன் என்பதே சக்திக்கு பட வாய்ப்பு கிடைக்காததற்கு ஒரு முக்கியமான காரணம். அதனால் பல இயக்குநர்கள் வாய்ப்புகள் கொடுப்பதில் தயங்கினார்கள். அதனால் எந்த அளவிற்கு பிளஸ் இருந்ததோ அதே அளவுக்கு மைனஸ்சும் இருத்தது.
சக்தியின் ஆன்மீக வழிபாடு, அம்மாவின் பிரார்த்தனை என அனைத்தும் சேர்ந்து அவரை நல்வழிப்படுத்தி தற்போது பவுன்ஸ் பேக் செய்து மீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பவும் என்ட்ரி கொடுக்க வருகிறார். தற்போது ஒரு சில பெரிய ப்ராஜெக்ட்களில் ஈடுபட்டுள்ளார். அது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.
சக்திக்கு நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என விருப்பமாம். விக்ரம், விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி நடித்தது போன்ற நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்க வேண்டும். அப்படி பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வர முடியும். அதனால் அது போன்ற ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசையாக இருக்கிறது என கூறியுள்ளார்.
சக்தியின் இந்த பிறந்தநாள் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து அவரின் விருப்பம் போல பல வாய்ப்புகள் பெற்று ஒரு கம் பேக் கொடுக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.