ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை தணிக்கை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக மத்திய அரசை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.நடராஜன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், “பொழுதுபோக்குப் பகுதியில் முக்கியப் பங்கு வகிக்கும் நெட்பிளிக்‌ஸ், அமேசான் பிரைம், டிஷ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், சோனி லைஃவ், ஜியோ சினிமா போன்ற சந்தா அடிப்படையிலான ஓடிடி தளங்களில் ஒவ்வொரு வாரமும் ஏராளமான வெப் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வெளியிடப்படுகின்றன. 


திரையரங்குகளில், திரையிடப்படும் படங்களை கண்காணிக்க மற்றும் கட்டுப்படுத்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உள்ளது. ஆனால் ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு தணிக்கை இல்லை” என்று தெரிவித்துள்ளார் 


மேலும், எந்த முறையான ஆய்வும் தணிக்கையும் இல்லாததால், சந்தா செலுத்தும் நபர்கள் இணைய குற்றங்கள் மற்றும் சந்தாதாரர்களின் தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்கள், வங்கி விவரங்களை இழக்க நேரிடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


ஓடிடி தளங்கள் பிரபலமடைந்து வருவதால், நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் கடுமையான வழிகாட்டுதல்கள் தேவைப்படுவதாகவும், ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களை தணிக்கை செய்யக் கோரி கடந்த ஜூலை 11ம் தேதி தகவல் தொழிட்நுட்ப செயலாளருக்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மனுவில் தெரிவித்துள்ளார்.


இந்த மனு இன்று தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும்  நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.பவித்ரா ஆஜராகி,பிற மொழிகளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்படும் வசனங்களிலும் ஆபாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதாகவும், இது குழந்தைகளை கெடுக்கும் வகையில் உள்ளதால் தணிக்கை செய்வது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.


பின்னர் நீதிபதிகள், எந்த வெப் தொடரில் இதுபோன்ற காட்சிகள் உள்ளது என குறிப்பிட்டு கூறாமல், பொதுப்படையாக உள்ளதாகவும், ஏற்கெனவே அளித்த மனு பரீசீலிக்கபட்டுள்ள நிலையில், ஏதேனும் குறைகள் இருந்தால், மத்திய அரசின் சம்மந்தபட்ட சட்ட அமைப்பிடம் புகார் செய்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என உத்தரவிட்டும் வழக்கை முடித்து வைத்தனர்.