Oscars 2024: 2023ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சினிமா துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கரில், பல்வேறு பிரிவுகளில் விருதுகளில் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், மார்வெலின் அயர்ன்மேன் திரைப்படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற ராபர் டவுனி ஜூனியருக்கு, ஓப்பய்ஹெய்மர் படத்தில் நடித்ததற்கான சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கிற்ஸ்டோபர் நோலன் இயக்கியது குறிப்பிடத்தக்கது. 58 வயதான ராபர் டவுனி ஜுனியர் ஏற்கனவே மூன்று முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தாலும், அவர் விருது வெல்வது இதுவே முதல்முறையாகும். இதனிடையே, சிறந்த எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருதையும் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் கைப்பற்றியுள்ளது. 


 






நடிப்பில் மிரட்டும் ராபர்ட் டவுனி ஜுனியர்:


கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய முன்னோடி அணு ஆயுத விஞ்ஞானியான ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றில், சில்லியன் மர்பி நாயகனாக நடிக்க அவருக்கு எதிரான லூயிஸ் ஸ்ட்ராஸ் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடித்து இருந்தார். அதில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இருந்தார். இதனை கவுரவிக்கும் விதமாக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் படத்திற்காக ராபர்ட் டி நீரோ , பார்பிக்காக ரியான் கோஸ்லிங் மற்றும் பூர் திங்க்ஸ் படத்தில் நடித்த மார்க் ருஃபாலோ உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி, டவுனி இந்த விருதை வென்றுள்ளார். இதற்கு முன்பு 1993 இல் சாப்ளின் திரைப்படத்திற்காக சிறந்த நடிகராகவும், 2009 இல் டிராபிக் தண்டர் படத்திற்காக சிறந்த துணை நடிகராகவும் டவுனியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோல்டன் குளோப், பாஃப்டா மற்றும் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் உட்பட பல சிறந்த விருதுகளை டவுனி வென்றுள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு, உலகம் முழுவதும் அந்த படம், 960 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக வாரிக் குவித்தது.