95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் அர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக கீரவாணி, சந்திரபோஸ் இருவரும் ஆஸ்கர் விருது வென்று ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு இந்திய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான ஆர்.ஆர். ஆர் படத்தில் இடம்பெற்று இந்தப் பாடலுக்கான தமிழ் வரிகளை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.


நாட்டு நாட்டு பாடல்:


இந்நிலையில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் மதன் கார்க்கி வாழ்த்தியுள்ளார். "ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றுள்ளது மகிழ்ச்சி. இந்த ஒட்டுமொத்த குழுவுடன் சேர்ந்து பணியாற்றி ‘நாட்டு நாட்டு’ பாடலோட தமிழ் பதிப்ப நான் எழுதினது கூடுதல் மகிழ்ச்சி. கீரவாணி சந்திரபோஸ், ராஜமவுலி எல்லோருக்கும் வாழ்த்துகள். இந்த மூணு பேருக்கும் முதல் வாழ்த்து. இந்தப் பாடல் பாடிய ராகுல், கால பைரவா இருவருக்கும் வாழ்த்துகள். 


இந்தப் பாட்டுக்கு நடனமாடி உலகமெல்லாம் எடுத்துட்டுப்போன ராம்சரண்,ஜூனியர் என்.டி.ஆருக்கு வாழ்த்துகள். பாட்டுக்கு நடனமைத்த ப்ரேமுக்கு சிறப்பு வாழ்த்து இவை எல்லாவற்றுக்கும் மூலம் விஜயேந்திர ப்ரசாத் எழுதின சூழல். இந்தப் பாட்டு ஏன் பிடிச்சதுனா, பாட்ட எழுதும்போது, கதை கேட்கும்போது, ஒலிப்பதிவு செய்யும்போது, திரைப்படத்தில் பார்க்கும்போதுனு ஒவ்வொரு முறையும் இந்தப் பாட்டு பெருசா எனக்குள் வளர்ந்துகொண்டே வந்தது.


பாடலாக மட்டும் பார்க்கவில்லை:


இதுக்கு காரணம், இந்தப் பாட்ட நான் ஒரு பாடலா மட்டும் பார்க்கல, இது ஒரு திரைப்படம்... இந்தப் பாட்டுக்குள்ள ஒரு போட்டி தொடங்குது. ஒரு பகை இருக்கு, பகைய வீழ்த்தணும் என்கிற வெறி இருக்கு, நட்பு, காதல் ,தியாகம் இருக்கு. இது மாதிரி எத்தனையோ உணர்ச்சிகள ஒரு படத்துல பூட்டி வச்ச குறும்படமா தான் நான் பாக்கறேன்.


பாட்டோட வெற்றி, இந்த ஒரு பாட்டுக்காக வெற்றி மட்டுமில்ல. கீரவாணி ஒவ்வொரு ஆண்டும் இசையமைத்து வந்துள்ள அழகழகான பாடல்களுக்கு சேர்த்து அவருக்கு கிடைத்த வெற்றி. ராஜமவுலி இத்தனை ஆண்டுகளாக தன் ஒவ்வொரு படத்திலும் தன் படங்களின் தரத்தின் உயரத்தை ஏற்றிக் கொண்டு நினைக்கும் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. விஜேந்திர பிரசாத் இந்த சூழல சொல்லும்போது இந்த வெற்றியத் தாண்டி ஒரு சூழல எங்களால் உணர முடிந்தது.


வெற்றிய தாண்டி எதிர்காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம், இந்தியில் உள்ள அத்தனை இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்களுக்கும் இது ஒரு ஊக்கமாக இருக்கும் என நான் நம்புகிறேன்" என மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.