திரைப்படங்கள் மற்றும் இலக்கியத்தில் கருப்பின மக்களின் போராட்ட கதைகள் வியாபாரமாக பார்க்கப்படும் போக்கை விமர்சிக்கும் வகையில் எடுக்கப் பட்டிருக்கும் படமே அமெரிக்கன் ஃபிக்ஷன்.
ஆஸ்கர் 2024
2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. பெரும்பாலான விருதுகளை கிறிஸ்டோஃபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் படம் வென்றுள்ளது. ஒப்பன்ஹெய்மர் தவிர்த்து பூவர் திங்ஸ், அனாடமி ஆஃப் ஏ ஃபால் உள்ளிட்டப் படங்களும் விருதுகளை வென்றுள்ளன. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது அமெரிக்கன் ஃபிக்ஷன் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க எழுத்தாளர் பெர்சிவல் எவரெட் (Percival Everett) எழுதிய எரேசர் (Erasure) என்கிற புத்தகத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கருப்பின மக்களின் வாழ்க்கை, நிற பாகுபாட்டால் அவர்கள் எதிர்கொண்ட கொடுமைகள் கலையில் வியாபாரமாக்கப்படுவதை பகடி செய்யும் விதமாக இந்த நாவல் எழுதப்பட்டது. அமெரிக்கன் ஃபிக்ஷன் படத்தின் ஒரு சுருக்கமான அறிமுகத்தைப் பார்க்கலாம்.
அமெரிக்கன் ஃபிக்ஷன் (American Fiction)
கருப்பின அமெரிக்க எழுத்தாளராகவும் பகுதி நேரம் மாணவர்களுக்கு இலக்கியம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராகவும் இருந்து வருகிறார் நாயகன் மாங் . தத்துவங்களின் மேல் , கிரேக்க தொன்மங்களின் மேல் அதிக ஆர்வம் கொண்ட மாங் அதை மையப்படுத்தி ஒரு சில புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். ஆனால் இவரது புத்தகங்கள் வாசகர்களிடம் அதிக கவனம் ஈர்ப்பதில்லை.
பெரும்பாலான அமெரிக்க சமூதாயம் கருப்பின மக்களின் சோகக் கதைகளை, அவர்களைப் பற்றிய கழிவிரக்கத்தை கோரும் படைப்புகளையே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தன்னுடைய நிறம் தன்னுடைய ஆளுமையை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பது மாங்கின் எண்ணமாக இருக்கிறது. தனது வலிகளை எழுதுவதைத் தாண்டி தன்னால் எல்லா தரப்பினருக்கும் தேவையான ஆழமான பார்வைகளை முன்வைக்க முடியும் என்று அவர் நினைக்கிறார்.
தன்னுடைய அப்பாவுடன் நெருங்கிய உறவு இல்லாத காரணத்தினாலும், தன்னுடைய கடந்த காலத்தை நினைவுபடுத்த விரும்பாத காரணத்தினால் தனது வீட்டை விட்டு அவர் ஒதுங்கியே இருக்கிறார். இப்படியான நிலையில் சந்தர்ப்ப சூழநிலைகள் அவரை அவர் வீட்டிற்கு சென்று அங்கு இருக்க வைக்கின்றன. பெரிதும் யாருடனும் ஒன்ற முடியாமல் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மாங் ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலடைந்து புனைப் பெயரில் மிகவும் மலினமான ஒரு நாவலை எழுதுகிறார். அந்த நாவல் மிகப்பெரிய அங்கீகாரமும் பெறுகிறது.
நகைச்சுவை பாணி:
கருப்பின மக்களின் வாழ்க்கையைப் பற்றி அவர்களைப் பற்றி வெள்ளை அமெரிக்கர்களின் பொதுப்படையான பார்வையே கலையில் வெளிப்படுவதும் கருப்பின படைப்பாளிகளும் இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக செயல்படுவதை நகைச்சுவையான பாணியில் விமர்சிக்கிறது இப்படம்.
இதில் என்ன முரண் என்றால் வருடா வருடம் ஆஸ்கரில் சொல்லி வைத்தது போல் கருப்பின திரைக்கலைஞர்களில் யாராவது ஒருவருக்கு விருது வழங்கப்படும். இந்த விருது வழங்கப்படுவது என்பது விமர்சனங்களைத் தவிர்க்கும் பொருட்டு செய்யப்படுவதாக பல விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.