Oru Nodi: பாராட்டுகளைப் பெறும் ஒரு நொடி படம்.. இயக்குநருக்கு கார் பரிசாக வழங்கிய தயாரிப்பாளர்!
Oru Nodi Movie: ஒரு நொடி படம் விமர்சனரீதியாக பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், அப்படத்தின் இயக்குநர் மணி வர்மனுக்கு தயாரிப்பாளர்கள் கார் பரிசளித்துள்ளார்கள்

ஒரு நொடி
மணிவர்மன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஒரு நொடி” (Oru Nodi Movie) படம் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, ஸ்ரீரஞ்சனி, கருப்பு நம்பியார், தீபா எனப் பலரும் நடித்துள்ளனர். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் நிறைந்த இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை மிக அதிகம் கவர்ந்தது.
ஒரு நொடி படத்தின் கதை
தனது மகள் திருமணத்துக்காக தன் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்குகிறார் ரஹ்மான். அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கப் போகையில் அவர் திடீரென்று காணாமல் போகிறார். அதே நேரத்தில் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப் படுகிறார். இந்த இரண்டு நிகழ்வுகளையும் விசாரிக்கிறார் நாயகன். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இருக்கும் தொடர்பு என்ன என்பதை மிகவும் சுவாரஸ்யமான முறையில் ஒவ்வொரு புதிராக விடுவிக்கிறார் இயக்குநர். நம் வாழ்க்கையில் ஒரு நொடியில் நாம் செய்யும் செயல்கள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கண்ணோட்டத்தை அடிப்படையாக வைத்து மிகவும் சுவாரஸ்யமான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரை வழங்கியிருக்கிறார் இயக்குநர் மணிவர்மன்.
Just In




ஒரு நொடி இயக்குநருக்கு கார் பரிசு
ரசிகர்கள் முதல் பத்திரிகையாளர்கள் வரை மிகவும் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது ஒரு நொடி படம். ஊடகங்களில் படத்துக்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் திரையரங்குகளில் இப்படத்திற்கான கூட்டமும் அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒரு நொடி படத்தின் இயக்குநர் மணிவர்மனுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்கள் படத்தின் தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்கள் மதுரை அழகர் மூவிஸ் அழகர், மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் கே.ஜி.ரத்திஷ் ஆகிய மூன்று பேரும் கார் பரிசளித்து அவரை உற்சாகப்படுத்தி உள்ளனர். தயாரிப்பாளர் தனஞ்செயனும் இயக்குநரை வாழ்த்தினார்.
கடந்த ஆண்டு போர் தொழில், டாடா, குட் நைட் போன்ற படங்களை இயக்கி பல புதிய இயக்குநர்கள் கவனமீர்த்தார்கள். அதே போல் இந்த ஆண்டு ஒரு நொடி படத்தின் இயக்குநர் தனது முதல் படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த ஆண்டு அறிமுக இயக்குநர்கள் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு ஒரு நொடி படத்தின் வெற்றி நல்ல அங்கீகாரத்தை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.