‘அணு ஆயுதத்தின் தந்தை’ என்று சொல்லப்படுபவர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர். பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அபாயகரமான அணு குண்டைக் கண்டுபிடித்தவர். இவரது வாழ்க்கை வரலாற்றை தற்போது படமாக்கி இருக்கிறார் கிறிஸ்டோஃபர் நோலன்.
ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை
புலிட்சர் விருது பெற்ற American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer எனும் புத்தகத்தைத் தழுவி இப்படத்தை உருவாகியிருக்கிறார் நோலன். இந்தப் புத்தகத்தில் ஓப்பன்ஹைமர் குறித்து கூறப்பட்டிருக்கும் தகவல்களால் ஈர்க்கப்பட்டு இந்தப் படத்தை அவர் இயக்க முடிவு செய்துள்ளார். ஓப்பன்ஹைமர் பற்றி நாம் குறிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், புனித நூலாகக் கருதப்படும் பகவத் கீதையில் மிகத் தீவிரமான வாசகராக அவர் இருந்திருக்கிறார் என்பது. தற்போது ஓப்பன்ஹைமர் படத்திலும் இந்தத் தகவல் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
பகவத் கீதையின் வாசகன்
பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஓப்பன்ஹைமர் எப்போதும் ஒரு பிரதியை தனது படுக்கைக்கு அருகில் வைத்திருந்திருக்கிறார். மேலும் 1933ஆம் ஆண்டு பகவத் கீதையை அதன் மூல மொழியான சமஸ்கிருதத்தில் படிக்க அந்த மொழியையும் அவர் கற்றுக்கொண்டாராம்.
மகாபாரதத்தில் அர்ஜூனன் மாதிரி ஓப்பன்ஹைமர்
வரலாற்றிசியரான ஜேம்ஸ்.ஏ.ஹிஜியா தான் எழுதிய ராபர்ட் ஓப்பன்ஹைமரின் கீதை புத்தகத்தில் மகாபாரதத்தில் வரும் அர்ஜுனனையும் ஓப்பன்ஹைமரையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். மகாபாரதத்தில் கிருஷ்ணன் அருஜுனனிடம் கூறும் ஆலோசனையான, “நாட்டைக் கைபற்ற வேண்டுமானால், நீ சண்டையிட வேண்டும். அதற்காக நீ உனது நண்பர்கள், உறவினர்களையே கொல்ல வேண்டியதாக இருந்தாலும், நீ சண்டையிட்டுதான் ஆக வேண்டும்” என்கிற வரிகளை, ஓப்பன்ஹைமர் ஜெர்மானியர்களிடம் இருந்து தனது நாட்டைக் காப்பாற்ற அணு ஆயுதத்தை உருவாக்கியதற்கான நியாயமாக எடுத்துக்கொண்டார் என்று ஒப்பிடுள்ளார். தனது நாட்டைக் காப்பாற்ற அணு ஆயுதத்தின் அவசியத்தை ஓப்பன்ஹைமர் உணர்ந்தார் என்றாலும், அது மனித குலத்தையே அழிக்கும் ஒரு ஆயுதமாக மாறும் என்று தெரிந்தும் அவர் அந்த முடிவை எடுத்தார்.
கிருஷ்ணனின் வரிகளை நினைவுகூர்ந்த ஓப்பன்ஹைமர்
1945ஆம் ஆண்டு முதல் அணு குண்டு சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தபோது அந்தத் தருணத்தில் தான் மகாபாரதத்தில் கிருஷ்ணன் சொன்ன “இவ்வுலகை அழிக்கும் மரணமாக நான் இப்போது அவதரித்து விட்டேன்“ என்கிற வரிகளை நினைவுகூர்ந்ததாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ஓப்பன்ஹைமர்.
வரும் ஜூலை 21ஆம் தேதி ஐ மேக்ஸ் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கான முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.