தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் புதியதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement

நடிகர் விஜய் தவெக-விற்கும், திமுக-விற்கும்தான் போட்டி போட்டி என்று மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில், விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவருக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்த சீமான், தற்போது அவரை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். 

விஜய்யை விமர்சிப்பது ஏன்?

இந்த நிலையில், நடிகர் விஜய்யை விமர்சிப்பது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக, கீழக்கரையில் பேசிய அவர், 15 வருடங்களாக நான் எடுத்து வைத்த கோட்பாடுகள் குறித்து நீங்கள் பார்க்கிறீர்கள். மொழி, இனம், வரலாறு குறித்து நீங்கள் பார்க்கிறீர்கள். இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை, இஸ்லாமிய மக்களின் உரிமை, சரியத், வக்ஃபு வாரிய சட்டம் குறித்த நிலைப்பாடு இருக்கிறதா? 

Continues below advertisement

 

அண்ணன் முன்வைத்த கோட்பாட்டைத் தாண்டி ஒரு தத்துவத்தை முன்வைத்து அவரையும் விட நான் ஆகச்சிறந்த ஒரு கோட்பாட்டுடன் வருகிறேன் என்றால் கைதட்டி வரவேற்று முதல் தொண்டனாக இருக்கத் தயாராக இருப்பவன்தான் இந்த சீமான். நீ ஒன்றுமே இல்லாமல் ஆன்றோர்களும், சான்றோர்களும் அரசியல் செய்த இந்த நிலத்தில் எவ்வளவு பெரிய பேரறிஞர்கள் இருந்த இடத்தில் இந்த இடத்தில் இவ்வளவு பெரிய கோட்பாட்டை வைத்து, இந்திய திராவிட சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டு அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் சமூகத்தில் இனச் சாவில் இருந்து பிறந்த மகன், 

கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகளை ஊடறுத்து, ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்து 220 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஏறாத நீதிமன்ற படிக்கட்டுகள் இல்லை. தொழில் செய்ய முடியாது, கடவுச்சீட்டு இல்லை, ஒரு நாட்டிற்கு பறந்து செல்ல முடியாது. 

கோபம் வருமா? வராதா?

இவை அனைத்தையும் விட்டு என் மொழி என் இனம் என் நாடு என் மக்கள் அவர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு என்று நின்று ஒரு ரூபாய் வாக்குக்கு காசு கொடுக்காமல், இந்த சாதி சீமானை ஆதரித்தது, இந்த மதம் சீமானை ஆதரித்தது, இந்த முதலாளி இவனுக்கு நிதி கொடுத்தான் என்று அல்லாது பிச்சை எடுத்து, திரள்நிதி திரட்டி, அதையும் திமுக கேலி செய்தது. பிச்சை எடுத்து கட்சி நடத்தி போராடி, போராடி 4.50 லட்சம் வாக்குகள் 1.1 விழுக்காட்டில் இருந்து 8.5 விழுக்காடுகள் வாங்கி தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற ஒரே அரசியல் கட்சியாக வந்து ஒரு கவனத்தைப் பெற்று திராவிட கட்சிகளை வீழ்த்தி தமிழ் தேசிய அரசியலை கட்டி நிறுவலாம் என்று போதும்போது, திடீரென உள்ளே வந்து திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றுதான், அண்ணா, பெரியார் மறுபடியும் எம்ஜிஆர் அப்படி என்றால் கோபம் வருமா? வராதா?

வரலாறு திரும்பியதா? அங்கேயே சுற்றுகிறதா? திமுக-வின் தோற்றுனர் அண்ணா. அதிமுக தோற்றுனர் எம்ஜிஆர். இரண்டு பேர் படத்தையும் வைத்துக் கொண்டு வரலாறு எங்கே திரும்புகிறது? நீதான் திரும்ப வேண்டும்? 

திராவிடம் என்பது தமிழர்கள் அல்லாதவர்கள் வசதியாக வாழவும், ஆளவும் கொண்டு வரப்பட்ட ஒன்றுதான். சங்கி என்றால் கூட நண்பன் என்று பொருள் வருது. திராவிடம் என்றால் எப்படி பார்த்தாலும் திருடன் என்று பொருள் வருது. 

இவ்வாறு அவர் பேசினார். 

விஜய் தேர்தல் களத்தில் அளவுக்கு அதிகமாக சீமானின் நாம் தமிழர் வாக்குகளை கைப்பற்றுவார் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் காரணமாகவே சீமான் மிக கடுமையாக விஜய்யை விமர்சித்து வருகிறார். இதனால், சமூக வலைதளங்களில் விஜய் - சீமான் ஆதரவாளர்கள் மல்லு கட்டி வருகின்றனர்.