நடிகர் விஜய்யின் வாழ்க்கையில் நவம்பர் 13 ஆம் தேதி என்பது ஏன் மிக முக்கியமான நாள் என்பதை வாங்க பார்க்கலாம். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 1992 ஆம் ஆண்டு ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் இதுவரை 67 படங்களில் நடித்துள்ளார். அவரின் 67வது படமான லியோ கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி கிட்டதட்ட ரூ.540 கோடி வசூல் செய்ததாக அதன் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். 


இப்படியான் நிலையில் நடிகர் விஜய் சினிமா கேரியரில் நவம்பர் 13 ஆம் தேதி என்பது மிக முக்கியமான நாளாகும். அதற்கு காரணம் சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த துப்பாக்கி படம் வெளியானது. அதற்கு முன்னால் கிட்டதட்ட 5 ஆண்டுகளாக தொடர் தோல்விகளை விஜய் படங்கள் சந்தித்து வந்தது. போக்கிரி படத்துக்குப் பின் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன், வில்லு, குருவி, வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தது. 


இதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு வெளியான காவலன், வேலாயுதம் ஆகிய படங்கள் விஜய்க்கு ஓரளவு நல்ல வெற்றியை கொடுத்து அவரது ரசிகர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. பின்னர் ஷங்கர் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு பொங்கலுக்கு “நண்பன்” படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த நிலையில் தான் அதே ஆண்டு தீபாவளிக்கு “துப்பாக்கி” படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் விஜய் முதல்முறையாக இணைந்திருந்தார். 


மேலும் காஜல் அகர்வால், சத்யன், வித்யூத் ஜமால், ஜெயராம், மீனாட்சி சௌத்ரி என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த துப்பாக்கி படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். “இந்த தீபாவளி நம்ம தீபாவளி” என்பது போல இதுவரை பார்க்காத விஜய்யை ரசிகர்கள் பார்த்து மிரண்டு போயினர். பெரிதும் பேசாத, அதே நேரம் காட்சிக்கு காட்சி ஆக்‌ஷன் என விஜய் ரசிகர்களை கவர்ந்திருந்தார். 


துப்பாக்கி படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல் விஜய்யின் சினிமா கேரியரில் ரூ.100 கோடி வசூலைப் பெற்ற முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது. இப்படத்துக்குப் பின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கத்தி, சர்கார் ஆகிய இரண்டு படங்களில் விஜய் நடித்தார். அந்த அளவுக்கு அவருக்கு இப்படம் கடும் தோல்வியில் இருந்து மீட்டுக் கொடுத்த சக்தியாக இருந்தது. கேப்டன் ஜெகதீஷ் ஆக அசால்ட் காட்டியிருந்த துப்பாக்கி படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இன்று #11YearsOfThuppakki என்ற ஹேஸ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர்.