தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடிகர் விஜய், ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து முடித்த பிறகு 2026ம் ஆண்டு முதல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் களம் காண போகிறார் என்றும் அவரின் அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து சென்னை பனையூரில் உள்ள அவர்களின் கட்சி அலுவுலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவிக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.   


 



அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின் பேரில் புதிய செயலி மூலம் சேர்க்க திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது. 



அந்த செயலியின் உள்ளே எப்படி நுழைய வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை வீடியோ மூலம் வெளியிட்டு இருந்தார் நடிகர் விஜய்.  உறுப்பினர்கள் சுலபாக கட்சியில் சேர்ந்து அடையாள அட்டையை பெறுவதற்காக தனித்தனியாக ‘க்யூஆர்’ குறியீடு கொடுக்கப்பட்டு இருந்தது. அதை பயன்படுத்தி உறுப்பினர் அட்டையை பெற்று கொண்டனர். தமிழகம் எங்கும் உள்ள ஏராளமானோர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக இணைந்து அதை சோசியல் மீடியாவில் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகிறார்கள். இதுவரையில் சுமார் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள் என கூறப்படுகிறது.  


அந்த வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினராக இணைந்துள்ளார் தென்னிந்திய சினிமாவின்  மூத்த நடிகர் நாசரின் மகன் நூருல் ஹுசைன் ஃபைசல்.  கட்சியில் சேர்ந்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட அட்டையை ஃபைசல் மிகுந்த மலர்ச்சியுடன் காட்டும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில்  பகிர்ந்துள்ளார் நடிகர் நாசரின் மனைவி கமீலா. 


 




நடிகர் நாசரின் மகன் நூருல் ஹுசைன் ஃபைசல் வெளிநாட்டிற்கு சென்று கேம் ஆர்ட்ஸ் படிப்பை படித்தவர். கேம் டிசைனிங் ஸ்டார்ட்அப் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டு வந்தார். 2014ல் சென்னை ஈ.சி.ஆர் சாலையில் ஏற்பட்ட விபத்தால் பலத்த காயம் ஏற்பட்டு மூளையின் செயல் திறன்கள் பாதிக்கப்பட்டது. அதனால் வீல்சேரில் முடங்கிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. விபத்திற்கு பிறகு அவருக்கு பேச்சு பயிற்சி கொடுக்கப்பட்டது. அப்போதுகூட அவர் விஜய் பெயரையே உச்சரித்துள்ளார். 



சிறு வயது முதலே நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்தவர் ஃபைசல். விஜய் படங்கள் ஃபைசலுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அவ்வப்போது விஜய்க்கு மெசேஜ் அனுப்பி தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி கொள்வார். தற்போது விஜய் கட்சி துவங்கியதும் அதில் உறுப்பினராக ஃபைசல் இணைந்து தன்னுடைய மரியாதையை செலுத்தியுள்ளார்.