பிரபல இந்தி சீரியல் நடிகை நீத்தி டெய்லர் தெலுங்குத் திரைப்பட இயக்குநர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை சினிமாவுலகில் ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்குத் திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் மீண்டும் தலைதூக்கியுள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. நீத்தி டெய்லர் ஒரு நேர்காணலில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது, “நான் தென்னிந்திய சினிமாவில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். முதல் படத்தில் நடித்த பிறகு, அதன் இயக்குநர் என்னை மற்றொரு படத்திற்காக அணுகினார்.
ஆனால், அவர் என்னிடம் நடந்துக் கொண்டதே வேறு மாதிரியாக இருந்தது. அதாவது, 'இந்த முறை நீ என்னுடன் பாலியல் உறவு வைக்க வேண்டும்' என்று கூறி ஒப்புக்கொள்ளுமாறு தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக செல்போன் அழைப்பைத் துண்டித்துவிட்டேன். மேலும் அவருடைய எண்ணையும் பிளாக் செய்துவிட்டேன்" என்று நீத்தி டெய்லர் கூறியுள்ளார். அப்போது அவர் அந்த இயக்குநரை ஒரு வயதானவர் என்று தெரிவித்திருந்தார். அவருடைய அழைப்பைத் துண்டித்த பிறகு, தனது தாயை அழைத்து கதறி அழுதேன்.
அவர் இதற்கு முன்பும் மற்ற பெண் கலைஞர்களிடம் தவறாக நடந்துகொள்வதை தான் பார்த்திருக்கிறேன். இருப்பினும் அவர் என்னிடம் அதேபோல் நடந்துகொள்வார் என்றோ அல்லது தனக்கு இப்படி நடந்தால் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுவாரோ ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். அந்த கசப்பான அனுபவத்திற்குப் பிறகு தென்னிந்தியப் படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்” என நீத்தி டெய்லர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த நேர்காணலில் நீத்தி இயக்குநரின் பெயரை குறிப்பிடவில்லை. அதேசமயம் தெலுங்கில் அவரின் முதல் படமாக 2012ம் ஆண்டு மெம் வாசாக்கு வாக்கு வெளியான நிலையில் அதனை திரிநாத் ராவ் நக்கினா இயக்கியிருந்தார். நீத்தி பேசும்போது அது தனது முதல் படம் என்று கூட சொல்லவில்லை. தனது முதல் படத்திற்குப் பிறகு இயக்குநரிடமிருந்து தனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்ததாக அவர் கூறினார். இதனால் திரிநாத் தான் அந்த இயக்குநரா என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் தனது பள்ளி நாட்களில் கழிவறைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் தனது தொலைபேசி எண்ணை எழுதியதற்காக சிலரிடமிருந்து மிகவும் மோசமான அழைப்புகள் வந்தது. அந்தத் தொல்லைகளைத் தாங்க முடியாமல், பள்ளிப் பேருந்தில் அழுத நாட்களும் இருந்ததாக நீத்தி டெய்லர் நினைவுக் கூர்ந்துள்ளார். தனது முன்னாள் காதலன் தான் குள்ளமாகவும், குண்டாகவும், அசிங்கமாகவும் இருப்பதாகக் கூறி தன்னை அவமானப்படுத்தியதாகவும் நீத்தி டெய்லர் வேதனை தெரிவித்துள்ளார்.
