3 மாதங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சமாதி நிலையில் இருந்த கைலாச அதிபரம் நித்யானந்தா, குருபூர்ணிமாவை முன்னிட்டு தன் பக்தர்களுக்கு நேரலையில் அருளாசி வழங்கினார். முதலில் ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர், பின்னர் சிறிது நேரம் இடைவெளிக்குப் பின் தமிழில் அருளுரையாற்றினார். அப்போது அவர் பேசியவை இதோ...
இந்த குருபூர்ணிமா நந்நாளில் பரமசிவம் பரம்பொருளின் ஆசி, நம் எல்லோர் மீதும் நின்றிருக்கட்டும். இந்த குருபூர்ணிமா நந்நாளில், என்னையே என் குரு பரம்பரைக்கு அர்ப்பணித்து, 42வது நிகழ்வை துவங்குகிறேன். பரசிவனின் பேரருள் எல்லாருக்கும், எல்லா நிலைகளிலும் நன்மை அளித்து, ஆனந்தம் அளிப்பதாகுக.
இன்றிலிருந்து 42வது சாதுர்மாசியத்தை துவங்குகிறேன். ஞானிகளும், சித்தர்களும் எல்லா பாரம்பரியத்தைச் சேர்ந்த பல்வேறு ஆன்மிக தலைவர்கள் அனைவரும் இந்த 4 மாதத்தை, ஆன்மிக கடமைகளுக்காக செயல்படுவார்கள். யாத்திரை செய்யும் சந்யாசிகள், இந்த 4 மாதங்கள் சாஸ்திரங்களை படிக்கவும், கற்பிக்கவும் செய்வார்கள். நானும் அதை கடைபிடிப்பேன்; நீங்களும் கடை பிடியுங்கள்.
3 மாத கால நீண்ட நெடிய சமாதிக்குப் பின் உங்களுடன் பகிர்ந்து கொள்ள பரமசிவனின் ஞானமும், ஆசியும், அருளும் நிறைய இருக்கின்றன. இன்றிலிருந்து சத்சங்கங்கள் வாயிலாக உங்களுடன் இனி பகிர்ந்து கொள்வேன். இன்று முதல் நாள் நான் சொல்ல விரும்புவது, மிகப்பெரிய நன்றி.
பலவிதத்தில் கைலாயத்திற்கு துணையாகவும், ஆதரவாகவும், பலமாகவும் நின்ற எல்லா பக்தர்கள் , அன்பர்கள் ,சீடர்கள், இந்துக்கள் அனைவருக்கும் நன்றி. நன்றியை தான் உங்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். பலபேர், உங்களின் காலம், பணம், உங்களுடைய அன்பு, ஆதரவு, பல நிலைகளிலும் கைலாயத்திற்கு துணை புரிந்தீர்கள், புரிந்து வருகிறீர்கள், அவர்கள் அனைவருக்கும் நன்றி.
பல பேர் உடல் நலத்தை விசாரித்து, உங்கள் அன்பையும் பரிவையும் வெளிப்படுத்தினீர்கள், அவர்களுக்கு நன்றி. சொல்ல வேண்டியது நிறைய இருப்பதனால், எதை முன் சொல்வது, எதை அடுத்து சொல்வது எனும் இந்த போராட்டத்தில் வார்த்தைகள் வெளிவராமல் அமைதியோடு இருக்கின்றேன்.
சமாதி நிலை பற்றி ஒன்று கூறுகிறேன். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் அழியாத காலாவதி தேதி இல்லாத ஒன்று இருக்கிறது. அழியுற பல விசயங்கள்; அதில் ஒன்று உடல், மனம், உணர்ச்சி. இதெல்லாம் அழிவது. ஆனால் ,இதையெல்லாம் தாண்டி, அழிவில்லாத ஒன்று நம்மில் இருக்கிறது. அதுதான் ஆன்மா.
அந்த ஆன்மாவில் தான், பரமாத்வான பரமசிவ பரம்பொருள் பிரதிபலிக்கின்றார். தன்னையே தன் மயமாக, தனக்குள் நிறைந்து நான், நான் என்று நம் எல்லாருக்குள் இருக்கின்ற அந்த ஆன்ம உணர்வுக்குள் அவர் இருக்கின்றார். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், காலாவதி தேதி இல்லாத நிரந்தரமான ஆன்மாவோடு, ஒன்றி இருப்பது தான் சமாதி நிலை.
எனக்கு 3 வயதாகும் போது, என் குருமார்கள், மடியில் அமர வைத்து சாத்தூர்மாசி விரதத்தை கடைபிடிக்க துவக்கி வைத்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை இந்து சமயம் சார்ந்த அனைத்து பயிற்சிகளையும், சாதனைகளையும் செய்திருக்கிறேன். தியாகங்கள், பூஜைகள், ஹோமங்கள் என கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செய்திருக்கிறேன். அழியாத ஒன்றின் மீது ஈடுபாடு வரும், அதன் மீது ஈர்ப்பு வரும். அது வந்துவிட்டாலே, பரமசிவன் உங்களுக்குள் நிறைந்து விடுவார்; அவருக்குள் நீங்கள் கரைந்து விடுவீர்கள். இது தான் சமாதி நிலை. அதில் பல நிலைகள் உள்ளது. ஏதாவது ஒரு சமாதியின் அனுபவம் ஏற்பட்டு விட்டால், உங்கள் உடல், உயிரும் பரமசிவன் வாழும் திருக்கோயிலாக மாறிவிடும். வரமாக மாறிவிடுவீர்கள்.
50 ஆண்டுக்கு முன்னாடி கூட, இந்தியாவின் எல்லா கிராமங்களிலும் குறைந்தபட்சம், 10 அல்லது 20 பேராக சமாதி நிலையை அனுபமாக பார்த்தவர்கள் இருப்பார்கள். நான் வளர்ந்த திருவண்ணாமலையில் நிறைய பேர் இருந்தார்கள். 80-களில் தான் நான் அங்கு இருந்தேன். அப்போதே சமாதி நிலையில் 100 பேர் இருந்தார்கள். இன்று கூட அங்கு சிலர் இருக்கிறார்கள்.
உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் ஞானதபோதரரை பிடித்து இழுத்து, வா என்று அழைத்து, உலகத்திற்கு தந்து கொண்டிருக்கும் நிறை ஞான கர்ப்பம், அண்ணாமலையான். ஒரு தலைமுறைக்கு முன்பு கூட, இந்த சமாதி நிலை என்பது வாழ்க்கை முறையாக இருந்தது. பரமசிவம் பேரருளால் அது மீண்டும் வாழ்க்கை முறையாக மாறும். அந்த திருப்பணி தான், கைலாசத்தின் முதல் திருப்பணி. அடுத்த நான்கு மாதத்திற்கு அதை கடைபிடிப்போம்.
ஏற்கனவே லட்சக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பெங்களூரு ஆதி கைலாச விடுதியில் உள்ளது. அதை இலவசமாக பெற்று, அதை மற்றவர்களுக்கும் இலவசமாக அளியுங்கள். தயவு செய்து வீணாக்காதீர்கள். படிக்க விருப்பமிருக்கிறவர்களுக்கு அளியுங்கள்; விருப்பத்தை ஏற்படுத்திவிட்டு அளியுங்கள்.
பெரும் ஆன்மிக கடமைகள் காத்திருக்கின்றன. உலகிற்கு நாம் செய்ய வேண்டிய நற்பணிகள் அதிகம் இருக்கிறது. இரவு 11:38 மணி ஆகிவிட்டது. இந்தியாவில் இருப்பவர்களுக்கு இது நள்ளிரவு நேரம். இன்றைக்கு நன்றி சொல்வதோடு முடித்துக் கொண்டு, நாளை, நாளை மறுநாள் நான் சொல்ல வேண்டியதை சொல்கிறேன்.
திடீர்னு கண்ணை திறந்து பார்த்தால் 3 மாதம் கழித்து உலகம் மொத்தமா மாறியிருக்கு. என்னய்யா பண்ணி வெச்சிருக்கீங்க... நிறைய சொல்லலாம்; சொல்ல நிறைய இருக்கிறது. ஏப்ரல் 13 ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை நிறைய நடந்திருக்கு. உங்களுக்கு அது 3 மாதம், எனக்கு அது யுகம். மிகப்பெரிய இடைவெளி. நன்றி சொல்லவே இன்று வந்தேன். எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசிர்வதிக்கிறேன்,’’
என்று பேசி தனது அருளாசியை முடித்தார் நித்யானந்தா!