சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய புதிய சீரியலான 'மல்லி' தொடரில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நிஷா கபூர். இவர் ஏற்கனவே 2002ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான 'ருத்ர வீணை' என்ற தொடரில் நடித்துள்ளார். தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
நிஷா கபூர் பற்றி தெரியாதவர்களுக்கு கூட நிஷாவின் கணவர் அஜய் கபூரை நன்றாக தெரியும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு பூச்சாண்டி போல மிரட்டிய 'கோலங்கள்' ஆதி தான் நடிகை நிஷாவின் கணவர் அஜய் கபூர். சில தினங்களுக்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நிஷா கபூர் தன்னுடைய பயணம் குறித்து பேசுகையில் அவர் தவற விட்ட அற்புதமான சினிமா வாய்ப்பு பற்றி பகிர்ந்து இருந்தார்.
விஜய் படத்திற்கு நோ:
ஸ்கூல் படிக்கும் சமயத்தில் இருந்தே மாடலிங் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார் நிஷா. கேமரா முன்னால் நடிப்பது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம். ஆந்த ஆர்வம் தான் அவருக்கு நடிக்க வாய்ப்பை பெற்று கொடுத்துள்ளது. ஏரளமான விளம்பரங்களில் நடித்துள்ளார். டாடா டீ தான் நிஷா நடித்த முதல் விளம்பரம். அதற்கு பிறகு 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். அப்படி விளம்பரங்களில் நடித்ததன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் 'ருத்ர வீணை' சீரியல். அதை தொடர்ந்து விஜய் டிவி உட்பட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
அப்படி சீரியலில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதிலும் விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும் அப்போது சினிமாவில் நடிக்க விருப்பமில்லாததால் அந்த வாய்ப்பை வேண்டாம் ஒதுக்கியுள்ளார். சீரியலில் மட்டும் நடித்தால் அதுவே போதுமானது என நினைத்து இருந்தார்.
அப்படி நடிகை நிஷா கபூர் வேண்டாம் என ஒதுக்கிய திரைப்படம் தான் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஷாஜஹான்' திரைப்படம். சினிமாவில் நடிக்க பெரிய அளவு ஈடுபாடு இல்லாதால் அந்த வாய்ப்பை இழந்தார். ஆனால் ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் தான் அவர்களின் சீரியல் ஷூட்டிங்கும் நடைபெற்றுள்ளது. அதை பார்த்ததும் அடடே சினிமாவில் நடித்து இருக்கலாமோ... வந்த வாய்ப்பை தவற விட்டுட்டோமோ என வருந்தியுள்ளார். தற்போது ஒரு பெரிய பிரேக் எடுத்து கொண்ட பிறகு மீண்டும் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அவரின் இந்த கம்பேக் நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.