கேள்வி : உங்கள் படங்களை விளக்குவதில் விருப்பமில்லாதவர் நீங்கள் இருந்தாலும் ஒரு குழப்பத்தைத் தெளிவுபடுத்தவே இந்தக் கேள்வி. நினைவோ ஒரு பறவை படத்தின் க்ளைமேக்ஸ் மேலோட்டமாக பார்த்தால் ஒரு அர்த்தம் தருகிறது. ஆனால் படத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் இருப்பதற்காகத்தான் சாத்தியங்களை ரசிகர்கள் டீகோட் செய்துவருகிறார்கள். ஆனால் நியுயார்க் டைம்ஸ் உங்களுக்கு கொடுத்த கதையில் ஒரு க்ளைமேக்ஸ்தான் இருந்திருக்க முடியும் இல்லையா? இந்தக் கதையின் திரைக்கதையை எப்படி வடிவமைத்தீர்கள்?



டி.கே: நியூயார்க் டைம்ஸ் எனக்கு கொடுத்த கதையில் ஒரு முடிவுதான் இருந்தது. ஆனால் பொதுவாக எனக்கு காதல் கதைகளின் மேல் பெரிய ஆர்வம் இல்லாத காரணத்தினால் இந்தக் கதையை என்னால் முடிந்த அளவு சுவாரஸ்யமாக உருவாக்க முயற்சி செய்தேன். இந்தப் படத்தை நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால் முதலில் இந்த படத்தின் கதை நிகழும் காலத்தை ஒரு வரிசைப்படுத்த வேண்டும். இந்தப் படத்தை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு ஒரு கதை தெரியும். இருவர் காதலிக்கிறார்கள், பிரிகிறார்கள்.


ஒருவன் தன் நினைவை இழக்கிறான் கடைசியில் அவர்கள் மீண்டும் சேர்கிறார்கள். இது ஒரு அர்த்தம். படத்தை இப்படி புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்த அர்த்தம் கிடைக்கும். ஆனால் நீங்கள் சற்று கவனித்து வேறு ஒரு திருப்பத்தை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் அது வேறு ஒரு அர்த்தத்தை உங்களுக்குக் கொடுக்கும். இதே மாதிரி படத்தில் நீங்கள் பின்பற்றி செல்வதற்கு நிறைய திசைகள் இருக்கின்றன. அதில் பார்வையாளர்கள் அவரவருக்குத் தேவையான அர்த்தங்களை சென்று சேரலாம்.


கேள்வி: உங்களது படங்களில் நீங்கள் தேர்வு செய்யும் லொகேஷன் பெரும்பாலும் பழைய அல்லது இடிந்த வீடுகளாக இருக்கின்றன. ஒரு லோகேஷனில் நீங்கள் உங்கள் ரசனைக்கேற்ப வடிவமைக்க விரும்புவதால் இந்த மாதிரியான இடங்களைத் தேர்வு செய்கிறீர்களா?


தியாகராஜா குமாரராஜா: என் ரசனையையோ அல்லது என்னை புகுத்துவதற்காக நான்  லோகேஷனை தேர்வு செய்வதில்லை. காட்சியமைப்பிற்கு தேவைப்படும் விஷயங்களை மையமாக கருதியே நான் எதுவாக இருந்தாலும் செய்ய நினைக்கிறேன். எனது படங்களில் வரும் ஓவியங்கள், சிற்பங்கள், ஒரு சீனில் பயன்படுத்தியிருக்கும் பொருட்களைக் கொண்டு படத்தின் கதாபாத்திரங்களின் குணாம்சங்களை பார்வையாளர்கள் புரிந்துகொள்ள முடியும்.


நினைவோ ஒரு பறவை படத்தில் கதாநாயகி சாம் வீட்டில் ஒரு சிலை இருக்கிறது என்றால் அந்த சிலையை வாங்கிய சாம் எந்த மாதிரியான ரசனை கொண்ட ஒரு கதாபாத்திரமாக இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும். சாமின் காதலன் கே அந்த வீட்டில் இருக்கும்போது அவன் அங்கிருந்து அவனது பொருளை எடுத்துச் சென்ற பின்பு என இரு வேறு காலங்களை வைத்து அந்தக் கதையை இன்னும் நன்றாக புரிந்துகொள்ளலாம்.